இனங்களுக்கிடையில் ஏற்படுகின்ற பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வுகளை காண்பதற்கும் இனங்களுக்கிடையில் நிலவும் விரிசல்களை வெகுவாகக் குறைத்து சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்து வதற்குமான பொறிமுறை ஒன்றின் அவசியம் பற்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனேடிய உயர் ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் தலைமையிலான குழுவினர் நேற்று புதன் கிழமை பிற்பகல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பில் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் முதலியோருடன் ஒட்டாவா நகரில் செயற்படும் கனேடிய பூகோள விவகார அமைப்பின் பிரதிநிதி பயாஸ் மஞ்ஜி, கனேடிய உயர் ஸ்தானிகராலய அரசியல் பொருளாதார, வர்த்தக ஆலோசகர் ஜெனிபர் ஹார்ட் ஆகியோரும் பங்குபற்றினர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரையும் பிரதிநிதிகளையும் சந்தித்த பிரஸ்தாபக் குழுவினர் யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் நாட்டில் படிப்படியாக ஏற்பட்டுவருகின்ற மாற்றங்கள் பற்றியும் இனமுரண்பாடுகளும் கசப்புணர்வுகளும் குறைவடைந்து வருகின்ற தன்மை பற்றியும் அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தினர்.
யுத்தகாலத்திலும் பின்னரும் தமிழ் மக்களிடமிருந்து பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீளக் கையளிக்கும் நடவடிக்கைகள் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், முஸ்லிம் மக்களிடமிருந்து அரசபடையினராலும் போராட்டக் குழுக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டும் அபகரிக்கப்ட்டும் இருந்த காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீண்டும் கையளிப்பதில் காட்டப்படும் அசமந்தப்போக்கில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
அத்துடன், அரசியலமைப்பு சீர்திருத்தம், அதிகாரப் பரவலாக்கம், தேர்தல் மறுசீரமைப்பு என்பனபற்றி அமைச்சர் தெளிவுபடுத்தியதோடு குறிப்பாக உத்தேச தேர்தல் சீர்திருத்தம், உள்ளூராட்சி சமைகளுக்கான எல்லை மீள் நிருணயம் என்பவற்றின் விளைவாக சிறுபான்மைக் கட்சிகளும் சிறிய கட்சிகளும் எதிர் நோக்கும் ஆபத்துக்களையும் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைகளின் நிருவாகத்தைப் பொறுத்தவரையில் ஏனைய மாகாணங்களில் ஆளுநர்கள் ஒரு மெத்தனப் போக்கையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் கடினப்போக்கையும் கையாண்டு வருவது குறித்தம் அமைச்சர் ஹக்கீம் விசனம் தெரிவித்தார்.
குறிப்பாக வரவு – செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்கான ஒதுக்கீட்டில் காட்டப்படும் பாரபட்சம், நிருவாகக் கட்டமைப்பில் காணப்படும் இழுபறி நிலை, வளப்பங்கீட்டின் சமத்துவமின்மை முதலியவற்றிலும் தனது அதிருப்தியை அவர் வெளியிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் சுகாதாரப் பிரதியமைச்சருமான பைஸல் காசீம், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கைத்தறி நெசவுத் தொழிலை மேம்படுத்துவதற்கும் அதற்கான சந்தை வாய்ப்புக்களை வெளிநாடுகளில் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பிரயாணத்துறையை ஊக்குவிப்பதற்கும் கனேடிய அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
உயர் ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் கருத்துரைக்கும்போது, கனேடிய அரசு பல்லினமக்கள் வாழும் அந்த நாட்டில் சகல சமூகங்களினதும் தனித்துவத்துக்கு உரிய மதிப்பளித்து வருவதாகவும் தத்தமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் உடைகளை அணிவதற்கு இடமளித்திருப்பதாகவும் உதாரணமாக படையிலும் பொலிஸிலும் பணியாற்றும் சீக்கியர்கள் தங்களின் பாரம்பரிய தலைப்பாகையை அணிவதற்குக் கூட வாய்ப்பு அளித்திருப்பதாகவும் அவற்றையிட்டுத் தமது நாடு பெருமிதம் அடைவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை மக்களுக்கு தமதுநாடு தொடர்ந்தும் உதவிவருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
