![]() |
| File Image - Waqf Board |
சில பள்ளிவாசல்களின் தலைவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் வக்பு சபைத் தலைவருக்கு எதிராக தொலைபேசியூடாக மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் விடுத்து வருவது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சி.ஐ.டி.) முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி மற்றும் அலைபேசி இலக்கங்களை சி.ஐ.டி. யிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரிவித்தார்.
வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசீன் இது தொடர்பில் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்;
‘வக்பு சபை பள்ளிவாசல்களின் வக்பு சொத்துகளில் நடைபெறும் ஊழல்கள், நிதி மோசடிகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் பற்றி விசாரணைகளை நடத்தி வருகிறது. அத்தோடு வக்பு சொத்துகள், ஊழல்கள் தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
இவ்வாறான முறைப்பாடுகளையே வக்பு சபை உரிய முறையில் விசாரித்து வருகின்றது.
இவ்வாறு ஊழல்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளே எனக்குத் தொலைபேசி மற்றும் அலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். தவறான மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கின்றனர். இதனாலேயே நான் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை நாடியுள்ளேன்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு தவறான முறையில் ஏசுகிறார்கள். பத்திரிகைகளில் எழுதுவோம் என்கிறார்கள். ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும்போது எம்மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.
வக்பு சபைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிறிய ஒரு கொடுப்பனவைப் பெற்றுக் கொண்டு தொண்டு சேவையையே செய்கிறார்கள். இதை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் வக்பு சொத்துகளில் இடம்பெறும் ஊழல்களுக்கு எதிராக வக்பு சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். வக்பு சொத்து அல்லாஹ்வின் சொத்து என்பதை பள்ளிவாசல் நிர்வாகங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
