முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ள கருத்து பெரும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.
எஎனினும் இந்த விடயத்தில் உலமா சபையும் முஸ்லிம் சமூகமும் மிகவும் நிதானமாக சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதன் காரணமாக அதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கடந்த இரு தசாப்த காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இதற்கமைவாகவே 2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சரால் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது தமது அறிக்கையை பூரணப்படுத்தும் இறுதித் தறுவாயில் உள்ளது.
இந் நிலையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் தேவையில்லை எனக் கோருவது ஆரோக்கியமானதல்ல. மாறாக ஷரீஆவுக்கு முரணான வகையில் எந்தவித திருத்தங்களும் இடம்பெறக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதே எமது கடப்பாடாகும்.
நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள் ,கல்விமான்கள் ,முஸ்லிம் சட்டத்தரணிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களே அங்கம் வகிக்கின்றனர்.
இவர்கள் ஒருபோதும் ஷரீஆவுக்கு முரணான திருத்தங்களை சிபாரிசு செய்யவோ அதற்கு உடந்தையாகவோ இருக்கப் போவதில்லை.
1951 ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்படாததன் காரணமாக திருமண விவகாரங்கள் மற்றும் காதி நீதிமன்ற செயற்பாடுகளில் பாரிய குறைபாடுகள் நிலவுவதை அன்றாடம் காண முடிகின்றது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பாரிய சமூகப் பிரச்சினைகளுக்கும் வித்திட்டுள்ளது.
எனவேதான் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் ஷரீஆவுக்கு உட்பட்ட வகையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுவது அவசியமானதாகும். இதற்கான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது சமூகத்தின் கடப்பாடாகும்.மாறாக திருத்தமே தேவையில்லை என வாதிடுவது ஒருபோதும் அறிவுடைமையாகாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
உலமா சபையின் நிலைப்பாடு மாறுமா?
March 25, 2017
