பைறுஸ்
மத்திய மற்றும் மாகாண அரசுகளிடம், தங்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்கக் கோரி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது வாரமாக தொடர்கிறது.
இந்தப் போராட்டம் தொடர்பாக அதிகாரத்திலுள்ளவர்களிடமிருந்து இதுவரையில் சாதகமான பதில்கள் கிடைக்காத நிலையில், இந்த போராட்டம் தொடர்வதாக பட்டதாரிகளினால் கவலையும், விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் பட்டதாரிகளுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக சுமார் 30 ஆயிரம் பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக கூறப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 5000 பட்டதாரிகள் 4 வருடங்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பின்றி இருப்பதாக வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் கூறுகின்றது.
பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்கான வயது எல்லை 36 ஆகும். இதனை 45 ஆக அதிகரிக்க வேண்டும்.
ஏற்கனவே, அரசு துறைகளில் தொழில் புரிபவர்கள் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புகளின் போது உள் வாங்கப்படக் கூடாது, பட்டதாரி சான்றிதழ் பெற்ற திகதியை கருத்தில் கொண்டு மூப்பு அடிப்படையில் தொழில் வாய்ப்பு கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளினால் மட்டக்களப்பு , காரைதீவு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனிடையே கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அரசு துறையிலுள்ள வெற்றிடங்கள் மூலம் தொழில் வழங்க தயாராகவிருப்பதாக கிழக்கு மாகாண சபை கூறியுள்ளது. இதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கோரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலொன்று நிதி அமைச்சில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பட்டதாரிகளைக்கொண்டு நிரப்புவதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படவிருப்பதாக இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் திறைசேரியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
எது எப்படியிருப்பினும் இந்தப் பட்டதாரிகளின் கோரிக்கைகளை இதன் பின்னரும் இழுத்தடிக்காது அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடன் அமுல்படுத்த வேண்டியதும் அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
