தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவினை மேம்படுத்த றவூப் ஹக்கீம் திட்டம் வகுத்தார்



பிறவ்ஸ்

கல்முனை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களின் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும், தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் நோக்‌கிலும் நேற்று
சனிக்கிழமை (04) கல்முனையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்‌ற இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கல்முனை மாநகரசபை கலைக்கப்பட்டபின்னர் அபிவிருத்தி நடவடிக்கையில் காட்டப்படும் பாரபட்சம் மற்றும் அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

நிர்வாக ரீதியாக செயலக பிரிவுகளிடையே இன்னும் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முடிவுகள் எட்டப்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைமையுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கலந்துரையாடல்கள் நடாத்தி சுமூகமான தீர்வுகளை காண்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

தொடர்ந்தும் இந்த விடயங்களை பேசுவது மாத்திரமின்றி, இங்கு உடன்பாடு காணப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காலதாமதமின்றி பெற்றுக்கொடுப்பதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகரசபையின் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்,  மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.