மீத்தொட்டமுல்ல : ஜனாதிபதி பிரதமர் தலைமையில் உயர்மட்ட கூட்டம்



மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும்  பிரதமர் ஆகியோரின் தலைமையில் விசேட கூட்டமொன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (19) இடம்பெற்றது.

அதனடிப்படையில், முழுமையாக சேதமடைந்த 98 வீடுகளில் வசிக்கும் மக்களுக்காக மிகவும் துரித கதியில் வீடுகளை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். 

மீள குடியமர்த்தும் குடும்பமொன்றுக்காக வேண்டி பெற்றுக் கொடுக்கப்படும் வீடொன்றுக்கு மேலதிகமாக, வீட்டுக்கு தேவையான அனைத்து வீட்டு உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபா நிதியுதவி அளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இனங்காணப்பட்டுள்ள அதியுயர் எச்சரிக்கை மற்றும் எச்சரிக்கை வலயங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள குடும்பங்களுக்காக ஜுலை மாதம் முதல் வாரத்திற்குள் வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பெயரில் நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மண் சரிவினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகளை இவ்வாரத்தினுள் முடித்து விட்டு, மதிப்பீட்டு அறிக்கையொன்றை பெற்றுத் தருமாறு மதிப்பீட்டு திணைக்களம் உட்பட உரித்தான அனைத்து நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. அவ்வறிக்கை கிடைத்தவுடன் அனைத்து நட்டஈடுகளுக்காகவும் வழங்கப்பட வேண்டிய நிதி துரித கதியில் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. தேவையான நிதியுதவிகளை திறைசேரியில் இருந்து துரிதமாக விடுவிப்பதற்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நலன்புரி நடவடிக்கைகளுக்காக தற்போது அரச மற்றும் தனியார் பிரிவினர் இணக்கத்தை தெரிவித்துள்ளமையினால், அவ்வுதவிகளை பெற்றுக் கொள்ளுமாறும், இதன் போது உரித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. முறையான தொழில்நுட்ப ஆய்வின் ஊடாக துரித செயன்முறையொன்றின் மூலம் குப்பை மேட்டை அகற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறும், நிறுவனங்களுக்கு இடையில் காணப்படும் பிளவுகளை துடைத்தெரிந்து, மீண்டும் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படாதிருக்க முறையான செயன்முறையொன்றை தயாரிக்குமாறும், மீட்பு நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதியவர்கள் குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

இவ்வனர்த்தம் ஏற்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் தஹம்புர கிராம உத்தியோகத்தரினால் அபாய நிலைமை தொடர்பில் கொலன்னாவ பிரதேச செயலாளரிடம் அறிக்கையிடப்பட்டுள்ளது. பிரதேச செயலாளரின் மூலம் கொழும்பு மாவட்ட செயலாளரின் ஆலோசனைகளின் அடிப்படையில் பிரதேச வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அநேகமானோர் குறித்த அறிவித்தலை புறக்கணித்ததாகவும் இங்கு தெரிய வந்துள்ளது.

மீத்தொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஒருவருக்கொருவர் பழி சுமத்துவதை விட்டு விட்டு, அரசாங்கம் எனும் ரீதியில் இதன் முழுமையான பொறுப்பை ஏற்று தேவையான சலுகைகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இங்கு சுட்டிக்காட்டினர்.

அதேபோன்று மீத்தொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஊடக அறிக்கைகளை வெளியிடல் மற்றும் இது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் பணியினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் மாத்திரமே மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில் மேலும் தீர்மானிக்கப்பட்டது.