சிரியாவின் மேற்கு அலெப்போ பகுதியில், இவ்வாண்டு மார்ச் 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், பள்ளிவாசல் மீதே மேற்கொள்ளப்பட்டது என, ஆதாரங்களுடனான அறிக்கையொன்று வெளிப்படுத்தியுள்ளது.
இலண்டனைச் சேர்ந்த தடயவியல் கட்டமைப்பு நிறுவனமொன்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம், புலனாய்வு நிறுவனமொன்று ஆகியன இணைந்து மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளிலேயே, இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்னர், பின்னர் காணப்பட்ட கட்டடங்களின் புகைப்படங்கள்; கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்கள்; கட்டடக் கலைஞர்களின் வரைவுகள் ஆகியனவற்றைக் கொண்டு, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அலெப்போவில் அமைந்துள்ள சயிடினா ஓமர் இபன் அல்-கட்டப் என்ற பள்ளிவாசலே இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், 38 பேர் உயிரிழந்திருந்த நிலையில், பள்ளிவாசல் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக, பொதுமக்களும் செயற்பாட்டாளர்களும் குற்றஞ்சாட்டியிருந்தனர். எனினும், ஐ.அமெரிக்க இராணுவம், இதை மறுத்திருந்தது. இரவு 7 மணியளவில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இது, சூரியன் மறையும் நேரப் பிரார்த்தனைக்கு ஒரு மணித்தியாலம் பிந்தியதாகவும் இரவுப் பிரார்த்தனைக்கு 15 நிமிடங்கள் முந்தியதாகவும் அமைந்துள்ளது. சாட்சிகளின் கருத்துப்படி, பள்ளிவாசலில் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமய விரிவுரையில், அப்போது 300 பேர் பங்குகொண்டிருந்தனர். தாக்குதல் ஆரம்பித்ததும், அங்கிருந்து மக்கள் வெளியேற, அவர்களை நோக்கி, எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும், இந்த அறிக்கை கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த பள்ளிவாசலில், அல்-கொய்தா அல்லது வேறு ஆயுதக் குழுக்கள், அந்தப் பள்ளிவாசலில் கூட்டமொன்றை நடத்திக் கொண்டிருந்தன என்ற குற்றச்சாட்டுக்கு, எந்தவித ஆதாரமும் கிடையாது என, மனித உரிமைகள் கண்காணிப்பகம், மேலும் குறிப்பிட்டது.
