காலி
கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள
ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் ஸியாரத்தின் பாதுகாப்பு மதில் இனவாதக்
குழுவினராலேயே சேதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் இன மோதல்களை உருவாக்குவதே அவர்களின் திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தெரிவித்தார்.
ஸியாரம்
சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; காலி
கோட்டை மக்கள் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கு
இடையில் சிறந்த நல்லுறவும் நல்லிணக்கமும் நிலவுதாகவும் இந்த நல்லுறவைச்
சிதைப்பதற்கு சிலர் திட்டமிட்ட இந் நாசகார செயலை மேற்கொண்டிருக்கலாம்
என்று தெரிவிக்கின்றனர்.
காலி கோட்டை கடற்கரையில் அமைந்துள்ள ஸியாரத்தை தரிசிக்க இராணுவ முகாம் வழியாகவும் கடற்கரை வழியாகவும் செல்லலாம். இச்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்பு செயலாளரிடம்
வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்
ஆன்மீகப் பெரியார் ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் இங்கு அடக்கம்
செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருடாந்தம் சமய நிகழ்வுகளும் இங்கு
இடம்பெறுகின்றன. முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகளை இல்லாது ஒழிக்க எம்மால்
இடமளிக்க முடியாது என்றார்.
