மனித வாழ்வில் கற்றல் என்பது நடத்தையில் ஏற்படும் நிரந்தரமான மாற்றம் என்றே உளவியலாளர்கள் கருதுகின்றனர். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஏதோ ஒருவகையில் வாழ்வின் அனைத்துப்பாகங்களையும் கற்கின்றான். கல்வி கற்பதற்காக தனது வாழ்க்கைக் காலத்தின் பெரும் பகுதியை செலவு செய்கின்றான். இவ்வாறு செலவிடப்படும் காலங்கள் பொருத்தமானதாக அமைதல் வேண்டும்.
வெறுமனே எல்லோரும் கற்கின்றார்கள் என்பதுக்காக கற்பதில் எவ்வித அர்த்தங்களுமில்லை. சடங்குக்காக அல்லது சமூகத்துக்காக கற்கின்றவற்றில் நடைபெறப்போவது எதுவுமில்லை.
தான் கற்கின்ற கல்வி முதலில் தனக்கு உதவவேண்டும். அடுத்ததாக தான் வாழ்கின்ற சமூகத்துக்கு உதவவேண்டும். இவை இரண்டுமில்லாத கல்வி என்பது சூன்யமாகவே கருதப்படும்.
இன்றைய சமூகச் சூழலில் சூன்யமிக்க இளைஞர்களை நிறையவே காணக்கிடைப்பது கவலையான விடயமே. அதற்கான அடிப்படை காரணங்களை அறிந்து தீர்த்துவைப்பது அரிதாகவே சமூகமட்டத்தில் காணப்படுகின்றது.
தற்சமயம் கல்விப் பொதுத் தராதர சாதராண தரப் பரீட்சை வெளிவந்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமக்கு பொருத்தமான துறையை தேர்வு செய்வதுவே முதலாவது அம்சமாகும். தேர்வு செய்வதில் எங்கு பிழைவிடப்படுகின்றதோ அங்குதான் சூன்யமிக்க இளைஞர் சமூகம் உருவாகின்றனர். இந்த நிலைமைக்கு காரணம் வெறுமனே மாணவர்களை மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது என்கின்றனர் கல்வியலாளர்கள். அதற்கான பொறுப்பினை பாடசாலை தொடக்கம் குடும்பம் வரை கசப்புணர்வுகளுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் வழமையான காலங்களை விட இவ்வருடம் கணிசமான பகுதிகளில் அடைவுமட்டங்கள் சிறப்பாக அமையப்பெற்றிருக்கின்றன. அவற்றுக்காக பல்வேறுபட்ட தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை பெறுபேறுகள் எடுத்தியம்புகின்றன. இருந்தபோதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தேசிய நிலைகளில் கடந்தகாலங்களில் எவ்விடத்தில் இருந்ததோ அவ்விடத்தையே இம்முறையும் தக்கவைத்துள்ளது என்பதுவே துன்பம் நிறைந்த செய்தியாகும்.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் பிற்பாடு, உயர்தர கற்கைகளுக்கான பாடத் தெரிவுகள் தொடர்பாக ஏற்படுத்தப்படுகின்ற விழிப்புணர்வுகள், ஆலோசனைகள் என்பது முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் விரல்விட்டு எண்ணக்கூடியதான அளவேயாகும்.
அதனால், இடைநிலைக்கல்வி, உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எந்தக்கற்கையை தெரிவு செய்வது ? எவ்வாறு கற்பது என்பதில் குழப்பமடைகின்றனர். சில மாணவர்கள் பிழையான பாடத் தெரிவின் மூலம் பரீட்சையில் தோற்றுப்போய்விடுகின்றனர்.
மேலும் கல்விக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறுகின்றவர்களில் பலர் தொழிற்றுறைக்கு பொருத்தமற்றவர்களாக ஓரங்கட்டப்படுகின்றனர். அவ்வாறானவர்களிடத்தில் உளத்திறன் விருத்தி செய்யப்பட்டிருப்பதில்லை. அதனால் தனியான தீர்மானம் எடுக்க முடியாமை, பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியாமை, அச்சம், குழுவாக பணியாற்ற முடியாமை, பல்துறை ஆற்றலின்மை, ஆங்கில மொழித் தேர்ச்சியின்மை, நவீன தொழிநுட்பங்களை கையாளமுடியாமை போன்றவற்றுக்கு முகம்கொடுக்கின்றனர். அதற்கான தீர்வாக பாடசாலை, சமூக மட்டங்களில் இருந்து ஆலோசனைகள் வழங்கப்படுதல் வேண்டும்.
பொதுவாக சமூகத்திலுள்ள பள்ளிவாசல்கள், பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்கள், கழகங்கள் என்பன இது விடயத்தில் ஒருசில பிரதேசங்களில் மந்தகதியில் செயற்படுவதுடன் பெரும்பாலான பகுதிகளில் செற்பாடுகள் அற்றே காணப்படுவதனை சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது.
மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அம்மாணவர்களை தொழில் ரீதியான தொழிற்கல்விக்கு தயார்படுத்துகின்ற நிலைமை இன்னுமில்லாமலுள்ளது வருந்தத்தக்கது என்கின்றனர் சமூகத்திலுள்ள மூத்த கல்வியியலாளர்கள்.
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், அமைப்புக்கள் மற்றும் கழகங்கள் சமூகத்தில் தேவையற்ற விடயங்களில் அதிகமதிகம் கவனம் செலுத்துகின்றனர். அல்லது விளையாட்டு இதர நடவடிக்கைக்கு கவனம் செலுத்துகின்ற அளவுக்கு கல்விச் செயற்பாடுகளுக்கான கவனம் இல்லாமல் போய்விட்டது.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்திலுள்ள பெரும்பாலானவர்களின் பொதுவான சிந்தனை உயர்தரம் கற்றால் போதும். அதன் பின் பல்கலைக்கழகம் செல்லுதல், ஒரு அரச தொழில் பெற்றுக்கொள்ளல் என்கின்ற வட்டத்துக்குள் நின்றுவிடுகின்றனர். பல்கலைக்கழகத்தின் பின்னர் அரசாங்கம் தங்களுக்கான தொழிலை தேடிவந்து தரவேண்டும் என்கின்ற எண்ணப்பாடும் மேலோங்கியுள்ளது. தொழில் ரீதியான கல்வியை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் என்பது பூச்சியமாகவே காணப்படுகின்றது.
அறிவை பெற கற்றுக்கொள்ளல் என்பது வேறு. பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வதற்கான வழிகள்என்பது வேறு. இந்த வித்தியாசங்களை புரிந்துகொள்ள நம்மில் எத்தனை பேர் ஆர்வமாகவுள்ளோம். இதுவே இன்றுள்ள மாணவர்களுக்குத் தேவையான கருப்பொருள்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தின் பின் உயர்தரத்தில் தெரிவு செய்கின்ற துறைகளுக்கு வழிகாட்டல்கள் மிகமுக்கியமாகும்.
அதனை பாடசாலை மட்டம் முதல் பெற்றோர்கள் மிகச் சரியாக வழிகாட்ட வேண்டும். இவ்வியடத்தில் மாணவர்களின் விருப்பு வெறுப்புகள் பெறப்பட்டாலும் அம்முடிவுகள் பட்டைதீட்டப்படல் வேண்டும். இல்லாதவிடத்து விளையாட்டுப் பிள்ளைகளின் மணல்வீடாகவே அவர்களின் எதிர்காலம் அமைந்துவிடும்.
முஸ்லிம் சமூகத்திலுள்ள மாணவர்கள்; மத்தியில் கல்விக்கான தாகம் வெகுவாகக் குறைந்துகொண்டு செல்கின்றது. இதனை பல்கலைக்கழங்கள், தொழிற்கல்வி நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கோடிட்டுகாட்டுகின்றன. இந்த நிலை மாற்றப்படல் வேண்டும். கல்வி அல்லது தொழிற்றுறைக்கல்வி தொடர்பான விழிப்புணர்வு, உளவளத்துணை செயலமர்வுகள் துறைசார் வல்லுநர்களை கொண்டு நடாத்தப்படுதல் வேண்டும். அச்செயலமர்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு சமூக ரீதியான பங்களிப்புக்கள் கணிசமானதாகவிருத்தல் வேண்டும்.
மேற்படி ஆலோசனை, வழிகாட்டல்கள் தனியாக தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும்.
தனியாள் ஆளுமையை விருத்தி செய்யவும், நெருக்கடியான சூழலில் சரியான தீர்மனம் எடுக்கவும், வெளியேற்ற முடியாது என்ற நம்பிக்கையுடன் இருக்கும் எதிர்மறையுணர்வுகளை வெளியேற்ற முடியும். மேலும் எதிர்கால வாழ்வில் இலட்சியத்துடன் முன்னேறுவதற்கான வழிகள் இதன் மூலம் ஏற்படும் என்பது திண்ணம்.
இந்நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெறாது போனால் மாணவர்கள்; தங்களுக்குப் பொருத்தமான தொழில்களை தெரிவு செய்துகொள்ள முடியாமல் போய்விடுவர்.
இதனால் சமூகத்தில் பல்வேறு நிலைகளிலும் சிக்கல்கள் தோன்றும். பிறழ்வு நடத்தை, சமூக முரண்பாடுகள் மற்றும் மன அழுத்தம் போன்றன நமது சமூக மாணவர்களை ஆட்கொண்டுவிடும் என்பதில் ஐயமில்லை.