தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகர கிளைக் காரியாலயத்தை அம்பாறைக்கு இடமாற்றுவதற்கு ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தன்னிடம் உறுதியளித்துள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் நீண்ட காலமாக இயங்கி வருகின்ற தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காரியாலயத்தை மூடும் வகையில் குறித்த காரியாலய முகாமையாளருக்கு பதவி உயர்வு வழங்கி இடமாற்றம் செய்திருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அந்தக் காரியாலயத்தை அம்பாறைக்கு இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இணையத் தளங்களிலும் முக நூல் பக்கங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை தான் தொடர்பு கொண்டு வினவிய போது அவர் அதனை முற்றாக மறுதலித்தார்.
இந்த நாட்டில் மிகவும் பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவராக இருந்து கொண்டு சிறுபான்மை மக்களை அரவணைப்பவராக தான் இருப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளாார்.
ஒருபோதும் கல்முனையில் செயற்படுகின்ற குறித்த அலுவலகத்தை மூடுவதற்கு நினைத்தும் பார்க்கவில்லை என்றும் அலுவலர்கள் இடமாற்றம், பதவி உயர்வு என்பன சாதாரணமான விடயம் என்றும் சுட்டிக்காட்டியதுடன் அதனை வேற்றுக் கண்கொண்டு நோக்க வேண்டாம் எனவும் சஜித் பிரேமதாச தன்னிடம் தெரிவித்தாக பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அத்துடன் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை கிளை காரியாலயத்தில் இருந்து பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ள முகாமையாளருக்கு பதிலாக புதிய முகாமையாளரை மிக விரைவில் நியமிக்குமாறு தனது அதிகார சபையின் தலைவருக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச பணிப்புரை விடுப்பதாகவும் குறித்த கிளை காரியாலயத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையினை எடுப்பதாகவும் தன்னிடம் உறுதியளித்தார்.
வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு உறுதியளித்துள்ளதனால் குறித்த விடயம் தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை" என பிரதி அமைச்சர் ஹரீஸ் குறிப்பிட்டார்.
