பாறுக் ஷிஹான்
தேசிய மீலாத் விழா குழு தொடர்பில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை ஆனால் எமது அமைச்சு தான் அக்குழு குறித்து இறுதி முடிவு செய்யும் என தபால் மற்றும் தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள மீலாத் நபி நிகழ்வு தொடர்பாக தொலைபேசி ஊடாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எமது அமைச்சினால் எதிர்வரும் தினங்களில் யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் நபி நிகழ்வு நடாத்தப்படவுள்ளது. இந்த நிகழ்வு சிறப்புற நடைபெறுவதற்கு ஒத்துழைப்புக்களை அனைவரும் வழங்க முன்வர வேண்டும்.சகல தரப்பினரையும் இணைத்து ஒற்றுமையாக குறித்த நிகழ்வை நடாத்த நான் உத்தேசித்துள்ளேன்.
எனினும் இந்த நிகழ்வை நடாத்த தற்போது வரை இரு தரப்பு குழுக்கள் வந்து என்னை சந்தித்துள்ளனர்.அவர்கள் தத்தமது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒரு தரப்பு ஒரு வைத்தியர் தலைமையில் வந்து சந்தித்தனர்.மற்றைய தரப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர் என தன்னை அடையாளப்படுத்தி வந்த ஒருவரது தரப்பு என்னுடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தது.இரு தரப்பினருடனும் நான் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தேன்.
இந்த விடயங்களை பொதுமக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இங்கே கூறுகின்றேன்.
இந்த நிகழ்வை சிலர் அரசியலாக்க பார்க்கின்றார்கள்.ஆனால் அது முடியாத காரியம்.இதில் ஒரு அமைச்சரும் உடந்தையாக செயற்படுகின்றார் என்பதை மனவேதனையுடன் சொல்ல விரும்புகின்றேன்.
எனவே தான் மீண்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.தேசிய மீலாத் விழா குழு தொடர்பில் எனது அமைச்சு தான் இறுதி முடிவு செய்யும்.தற்போது ஒரு குழு நியமிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி குறித்து பொதுமக்கள் எவரும் நம்ப வேண்டாம்.
ஆகவே இந்த நிகழ்வை சகல தரப்பினரையும் அரவணைத்து உள்வாங்கி சிறப்புற நடாத்துவேன் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
