வவுச்சர்களுக்காக போட்டி போடும் வியாபாரிகள்: பெற்றோருக்கு முக்கிய அறிவித்தல்

NEWS


பாடசாலை இறுதித்தவணை விடுமுறையின் போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடைத்துணி வவுச்சர்களை பெற்றுக்கொள்வதில் புடவைக் கடை வியாபாரிகள் போட்டி போடுகின்றனர்.

வவுச்சர்களை பெற்றுக்கொண்டு மாணவர்கள் வீடு நோக்கி செல்லும் போது சில புடவைக்கடை வியாபாரிகள் மாணவர்களை வழி மறித்து, அவர்களிடமிருந்து வவுச்சர்களை பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக வெள்ளைத் துணிகளை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு பலவந்தமாக வவுச்சரைப் பெற்றுக் கொண்டு வியாபாரிகளால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடைத் துணி சில தரங்குறைந்தவையாக இருந்ததாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் அவசர தொடர்புக்காக 1988 என்ற இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 'வவுச்சருக்கு பாடசாலைச் சீருடைத்துணி' எனும் பதாதைகளை வாகனங்களில் தொங்கவிட்ட படி இடம்பெயர் துணிக்கடைகளும் நடமாடுகின்றன.

அரசாங்கத்தால் மாணவர்களுக்கான சீருடைத்துணிக்காக வழங்கப்படும் வவுச்சர்களை அபகரிக்கும் வகையில் அதிபர்களோ வர்த்தகர்களோ மாணவர்களையும் பெற்றோர்களையும் வற்புறுத்தக் கூடாது என கல்வி அமைச்சு கடந்த மாதம் 30ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.
அவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஆங்காங்கே முறைகேடுகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags
3/related/default