வங்குரோத்துத்தனத்தை புகழேந்திகள் கைவிடவேண்டும்.!




இன்று எமது இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள மக்களையும் அவர்கள் எமக்கு காட்டுகின்ற ஆதரவையும் கண்டு உண்மையில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

கொண்டச்சி மக்கள் தமது பூரண ஆதரவை எமது வேட்பாளர் மக்பூல் அவர்களுக்கு வழங்கியிருப்பதை பார்க்கின்றபொழுது இன்ஷாஅல்லாஹ் அவரது வெற்றி விழாவை நாங்கள் கொண்டாடுவோம்.

 இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் தெரிவித்தார். 

முசலி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட  பாலைக்குழி மற்றும் கொண்டச்சி பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது மீள்குடியேற்ற செயலணியானது எமது மக்களின் சகஜமான வாழ்வொன்றுக்காக எமது ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும்.

அது எந்த ஒரு கட்சியின் கிளை நிறுவனமோ அல்லது எந்த ஒரு அமைச்சின் கீழ் வரும் ஸ்தாபனமோ அல்ல என்பதை நீங்கள் தெளிவாக  தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

எமது மக்களுக்காக எமது ஜனாதிபதியால்  உருவாக்கப்பட்ட அந்த செயலணியின் வேலைத்திட்டங்களை சில வங்குறோத்து அரசியல்வாதிகள் தமது சேவைகளாக சித்தரித்து அரசியல் படமொன்றை காட்டித்திரிகின்றனர்.

மன்னார் பெரியமடுவில் ஒரு வங்குறோத்து கட்சி ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு இந்த மீள்குடியேற்ற செயலணியின் பணிகளை தமது கட்சியே செய்ததாகவும் மற்றைய கட்சிகள் எதுவுமே செய்யவில்லை என மக்களுக்கு  படமோட்டியுள்ளனர்.

 இது அப்பட்டமான பொய்யாகும்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல்வேறு பட்ட முன்மொழிவுகளும் ஆலோசனைகளும் சேவைகளும் மீள்குடியேற்ற செயலணியின் பணிகளில் பின்னிக்கிடக்கின்றன.

இவையெல்லாம் மக்களுக்கு  தெரியக்கூடாது என்ற நோக்கத்தில் வாய்வார்த்தைகளில் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளையிட்டு நாம் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்திருக்கிறோம்.

இந்தத் தேர்தல் முடிவடைந்த பின் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


 எனவே நீங்கள் யாவரும் ஒன்றுபட்டு உங்களுக்காக உழைக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றியடையச்செய்ய வேண்டும் என உங்களிடம் வினயமாக வேண்டுகோள் விடுக்கிறேன் எனவும் குறிப்பிட்டார். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சேனக்க அபேகுணசேகர அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.