அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களிடம் சாய்ந்தமருது மக்களின் கருணையான வேண்டுகோள்!

NEWS


ஏ.எல்.ஜுனைதீன்

சாய்ந்தமருதில் நாளை 3 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்குபற்றுதலுடன் மாநாடு ஒன்றை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாண்புறும் சாய்ந்தமருது என்ற பெயரிட்டு எழுச்சி மாநாடு என்ற தொனியில் நடாத்தப்படவிருக்கும் இந்த மாநாட்டிற்கு அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்களை அழைத்துவரவும் திட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சாய்ந்தமருதிலுள்ள பொது அமைப்புக்கள் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களிடம் கருணையான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
சாய்ந்தமருது மக்களின் கருணையான வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

எமது அயல் ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நேசத்துக்குரிய ஆதரவாளர்களே! எமது சகோதரர்களே!! உடன் பிறப்புக்களே!!!
எமது ஊரான சாய்ந்தமருதில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பது வெறுமனே ஒரு அரசியல் போராட்டமல்ல என்பதை தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். 

அது சாய்ந்தமருது மக்களின் உரிமைப் போராட்டம்.
தங்களின் தன்மானத்தைக் காப்பதற்கான மக்கள் போராட்டம்.
நாளைய சாய்ந்தமருது மக்களின் சந்ததிகளுக்காக இன்றைய முதலீடு.
சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

நாங்கள் உங்களை எதிர்க்கவில்லை எதிர்க்கப் போவதுமில்லை.
எங்களை ஏமாற்றியவர்களைத்தான் எங்களின் இந்த சாய்ந்தமருது மண்ணில் எதிர்க்கிறோம்.

நீங்கள் உங்களின் ஊரிலோ அல்லது வேறு எந்த ஊரிலோ கட்சியின் அபிமானத்தைக் காட்டுங்கள்.

தயவுசெய்து சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை மலினப்படுத்துபவர்களுக்கு ஆதரவு காட்ட இங்கு வராதீர்கள்.

இருக்கும் நாட்களில் ஒரு நாள் ஒருவேளை, உங்களை சாய்ந்தமருதுக்குள் அழைத்து வந்து, சாந்தமான எமதூரை போர்க்களமாக்க முயற்சிக்கலாம். 

ஏனெனில், இப்போதைக்கு அது தான் அவர்களின் கடைசி ஆயுதமாக இருக்கின்றது. தயவுசெய்து அதற்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம் சகோதரர்களாகிய நீங்கள் அவர்களின் திட்டத்திற்கு துணை போய்விடாதீர்கள்.

எமது சாய்ந்தமருது மக்களின் தூய்மையான உணர்வுள்ள எழுச்சிப் போராட்டத்தில் களங்கத்தை ஏற்படுத்த துணைபோன மக்களில் நீங்களும் ஒருவர் என்ற பழிக்காளாகிவிடாதீர்கள்.

சாய்ந்தமருது மக்களாகிய நாங்கள் எமது இலக்கான தனியான உள்ளூராட்சி சபைக்காக போராடுகின்றோம். முடிந்தால் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

இல்லையேல் தயவுசெய்து விலகியிருங்கள் ஒத்துழைப்புத் தாருங்கள்.
சாய்ந்தமருது மக்கள் நன்றி மறவாதவர்கள் எங்களுக்கு நீங்கள் தரும் ஒத்துழைப்பை சாய்ந்தமருது மக்களாகிய நாங்கள் ஒருபோதும் மறந்துவிடமாட்டோம்.

எல்லாவத்திற்கும் அல்லாஹ் போதுமானவன்
Tags
3/related/default