Headlines
Loading...
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் : 4வர் அடங்கிய குழு நியமிப்பு

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் : 4வர் அடங்கிய குழு நியமிப்பு

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக, நால்வரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு ஒரு வாரத்தில் தனது இறுதி அறிக்கையைத் தயாரிக்க இருப்பதாக, அ.இ. உலமா சபையின் பிரதிச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில், உலமா சபைத் தலைவர் அஷ்ஷேய்க் றிஸ்வி முப்தி, அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்தபா ஆகியோர் அடங்குகின்றனர்.

முஸ்லிம் தனியார் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட குழுவொன்றை நியமித்ததோடு, இது தொடர்பில் இரு அறிக்கைகள் நீதி அமைச்சிற்கு வழங்கப்பட்டிருந்தன.

நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் தலைமைகளில், இருவேறு அறிக்கைகள் கையளிக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் தனியார் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பில் நீண்டகாலமாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல்வேறு மட்டங்களில் இது தொடர்பாக ஆராயப்பட்டதோடு, இறுதியில் இது சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான பொறுப்பு, முஸ்லிம் எம்.பி. க்களுக்கு வழங்கப்பட்டது.

குறைந்த பட்ச திருமண வயதை 18 ஆக மட்டுப்படுத்துதல், திருமணப் பதிவில் மணப்பெண் கட்டாயமாகக் கையொப்பம் இடல் உள்ளிட்ட 11 விடயங்கள் தொடர்பில், முஸ்லிம் எம்.பி. க்களிடையே ஏற்கனவே உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில், முஸ்லிம் எம்.பி. க்களுக்கும், உலமா சபை முக்கியஸ்தர்களுக்கும் இடையில் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் வீட்டில் முக்கிய சந்திப்பொன்று திங்கட்கிழமை (22) நடைபெற்றது.

முஸ்லிம் தனியார் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில், தற்போதைய நிலைமை குறித்தும் பாதகமின்றி இதனை கையாள்வது பற்றியும், இங்கு ஆராயப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பின் நிறைவில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு, இக்குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், மீண்டும் உலமா சபையும் முஸ்லிம் எம்.பி. க்களும் சந்தித்து, அதன் இறுதி வரைபைத் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் எட்டப்படும் உடன்பாட்டின் பின்னர், அதன் இறுதி அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் உலமா சபையின் பிரதிச் செயலாளர் மௌலவி தாஸிம் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில், அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா, ரவூப் ஹக்கீம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் நஸீர், தௌபீக், காதர் மஸ்தான், முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும், உலமா சபை சார்பில் அதன் செயலாளர் மௌலவி எம்.எம்.ஏ. முபாறக், உப தலைவர் மௌலவி அப்துல் ஹாலிக், உப செயலாளர்களான மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், மௌலவி எம்.எம்.எம். முர்ஷித் மற்றும் உலமா சபை உறுப்பினர்களான மௌலவி ஹஸன் பரீத், மௌலவி எஸ்.எல். நௌபர், மௌலவி பாதில் பாரூக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே நீதி அமைச்சிற்குக் கையளிக்கப்பட்ட இரு குழுக்களினதும் அறிக்கைகளின் பிரகாரம் பொருத்தமான அறிக்கையொன்றை, நால்வரடங்கிய குறித்த குழு தயாரிக்க இருப்பதாகவும் மௌலவி தாஸிம் தெரிவித்தார். காலதாமதமின்றி அவசரமான இந்தச் சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கும், இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

0 Comments: