இலங்கையில் மாடறுப்புத் தடை அமுல்படுத்தப்படுமானால் அது சிங்கள- முஸ்லிம் பிளவை மேலும் ஆழமாக்கும் என இந்திய வெளிவிவகாரத்துறையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஆச்சல் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இலங்கையில் பிரதமரால் முன்மொழியப்பட்டுள்ள மாடறுப்புத் தடைச் சட்டம் தொடர்பில் பிரபல இந்திய இணையத்தளம் ஒன்றில் எழுதியுள்ள விரிவான கட்டுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் ஆளும் கட்சியான பொது ஜன பெரமுன நாடளாவிய ரீதியில் மாடறுப்பதை தடை செய்யும் சட்டத்தை கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு அக் கட்சியின் பாராளுமன்றக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சிகளை அக்கட்சி முன்னெடுத்து வருகிறது. எனினும் மாட்டிறைச்சி உண்பவர்களுக்காக, அதனை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் அதிகமானோர் இறைச்சி உண்பவர்களாவர். எனினும் மதம் மற்றும் கலாசார காரணங்களால் பௌத்தர்களும் பசுவினை வணங்கும் இந்துக்களும் மாட்டிறைச்சிக்கும் மாடறுப்புக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எனினும் முஸ்லிம்களினதும் கிறிஸ்தவர்களினும் (குறிப்பாக ஐரோப்பிய வம்சாவளியினர்) உணவுப் பழக்கத்தில் மாட்டிறைச்சி பிரதான இடம்வகிக்கிறது.
இலங்கையில் வருடமொன்றுக்கு ஒருவருக்கு தலா 7.9 கிலோ கோழி இறைச்சியும் 1.8 கிலோ மாட்டிறைச்சியும் 0.32 கிலோ பன்றியிறைச்சியும் 0.1 கிலோ ஆட்டிறைச்சியும் சந்தையில் கிடைக்கப் பெறுவதாக இலங்கை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் 2013 ஆம் ஆண்டைய அறிக்கை குறிப்பிடுகிறது.
செல்வாக்குமிக்க பௌத்த தேரர்களும் குறிப்பாக பௌத்த மத தலைவர்களும் இலங்கையில் மாடறுப்பைத் தடை செய்யுமாறு பதவிக்கு வருகின்ற அரசாங்கங்களிடம் விடுத்து வந்த கோரிக்கைகள் இதுவரை வெற்றியளிக்கவில்லை.
மாடறுப்புத் தடைக்கான புதிய யோசனையின் பின்னாலுள்ள காரணம்
அதிகாரத்துக்கு வந்து ஒரு மாத காலத்தினுள் இவ்வறிவித்தலை விடுத்தமைக்கான இரு சாத்தியமான காரணங்களைக் குறிப்பிட முடியும். முதலாவது, பொது ஜன பெரமுனவின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பைச் செய்த பெரும்பான்மை பௌத்த மக்களுக்கு ‘நன்றி’ சொல்கின்ற ஒரு வழிமுறையாக இதனை கருத முடியும். அடுத்தது, வாக்களித்த மக்களின் (மாடறுப்புத் தடைக்கான) கோரிக்கைகளுக்கு இந்த அரசாங்கம் முன்னுரிமை வழங்குகின்றது என்ற செய்தியை இதனூடாகச் சொல்ல விளைவதாகவுமிருக்கலாம்.
இதைவிட மிக முக்கியமாக, முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு மீளவும் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சிங்கள பௌத்த மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவும் இதனைக் கருத முடியும்.
இதற்கு மேலதிகமாக, வடக்கில் வாழும் தமிழ் இந்துக்களின் மனதில் இடம்பிடிப்பதற்கான ஒரு நகர்வாகவும் இதனைப் பார்க்கலாம்.
அடுத்தது என்ன?
மாடறுப்புத் தடை அமுல்படுத்தப்பட்டால் தேசியவாத சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான பிளவு மேலும் ஆழமாக்கப்படும். இலங்கை நீண்ட கால இன முரண்பாட்டு வரலாற்றைக் கொண்டுள்ளது.
சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் குறித்தே அதிகம் கவனம் செலுத்திய போதிலும், இலங்கையில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான மோதல் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
இலங்கையிலும் குறிப்பிட்டளவு ‘இஸ்லாமோபோபியா’ நிலவுகிறது. இஸ்லாமிய மத சடங்குகள், ஹலால் இறைச்சி மற்றும் புர்கா போன்ற கலாசார நடைமுறைகள் குறித்து பௌத்தர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். முஸ்லிம்களின் ஹலால் முறைமையானது வேதனைமிக்கது என்றும் கருணை தொடர்பான தமது நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் பௌத்தர்கள் கருதுகின்றனர்.
பொருளாதாரத்திற்கு பாதிப்பின்றி இத்தடையை அமுல்படுத்த முடியாது. மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதானது அந்நியச் செலாவணி இருப்பை மேலும் பாதிக்கும். மாட்டிறைச்சியின் விலை அதிகரிப்பதுடன் அது நுகர்வோருக்கு பெரும் சுமையாக மாறும்.
மாடறுப்புத் தடையை ஆதரிப்போர், பால்பண்ணைத் தொழில் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என வாதிட்டாலும் இத் தடை மூலம் பலர் தொழில்களை இழக்க வேண்டிவரும்.
அதேபோன்று பால் தராத, பொருளாதார ரீதியாக பயன் தராத பசுக்களை கையாள்வதற்கான போதிய உட்கட்டமைப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த பசுக்களை ஏற்றுமதி செய்வதை அல்லது கொல்வதை பௌத்தர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
இந்த விடயத்தில் அரசாங்கம் சமூக – பொருளாதார தாக்கங்களை கருத்திற் கொண்டு முன்னகருமா? இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள மாடறுப்புத் தடை பற்றிய முன்மொழிவை எவ்வாறு சட்டமாக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். – Vidivelli
Post a Comment