அமெரிக்கவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த மன்னர் பைசலும் இலங்கை முஸ்லிம் அரசியல் துரோகமும்.





றிம்சி ஜலீல்,

இலங்கை அரசியல் வரலாற்றில் மன்னர் காலம் தொட்டு பல்வேறு அரசியல் துரோகங்களும் அரசியல் பழிவாங்கல்களும் காலத்துக்கு காலம் மாறுபட்டு வருகின்ற கால நிலைக்கேற்ப அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

148 ஆசனங்களை மாத்திரம் வைத்திருந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு மேலதிக 08 வாக்குகளை பிரதான எதிர்க்கட்சியின் முஸ்லிம், தமிழ் உறுப்பினர்கள் வழங்கியதால் அவர்கள் வெற்றி கண்டார்கள். அதிலும் குறிப்பாக  ஒரு சில நாட்க்களாக 20ம் சீர்திருத்தத்துக்கு ஆதரவளித்து முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் அப்பட்டமான நம்பிக்கைத் துரோகிகளாக மாறிவிட்டார்கள் என்கின்ற செய்தி சமூகவலைத்தளங்களில் ஆடிக்கொரு முறை எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு சாரார் ஆதரவு வழங்கியது தவறு என்றும் அதன் மூலம் இன்று இந்த முஸ்லிம் சமூகத்திற்கு துரோகம் செய்துவிட்டதாகவும் முஸ்லிம் வாக்குகளை மகிந்த ராஜபக்சவுக்கு தாரைவார்த்து விட்டதாகவும் விமர்சனம் செய்து கொண்டு வருகிறார்கள்.

இன்னுமொரு சாரார் இவ்வாறு ஆதரவு வழங்கியதனால் அதில் ஏதாவது நலவு இருக்கும் தானே? முஸ்லிம்களுக்கெதிரான 'இனவாத' அச்ச சூழ்நிலை குறையும் தானே? என்ற பொது நன்மைகள் பற்றியும், மேலும் அமைச்சுப் பதவிகள் கிடைத்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும், நம்மையும் கவனிப்பார்கள், என்றெல்லாம் எழுத தொடங்கி விட்டார்கள்.

எனவே இந்த விடயத்தை சவுதி அரேபியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட மன்னர் பைசல் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றின் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன்.

அவர் பலஸ்தீனை மீட்க மிகவும் கடுமையாக முயற்சி செய்த போது, அவரை அமெரிக்கா மிரட்டியது. பொருளாதாரத் தடைவிதிக்கப் போவதாக எச்சரித்தார்கள். இன்று ஆட்சி சுகம் அனுபவிக்கும் கோழைகள் போன்று அவர் மிரளவில்லை. அமெரிக்காவை அவர் மிரட்டினார்.

1969ம் ஆண்டு குத்ஸ் எரிக்கப்ட்டபோது கொதித்துப் போனார் மன்னர் பைசல். அவர் இஸ்ரேலுக்கு எதிரான ஒக்டோபர் யுத்தத்தின்போது, மேற்கு நாடுகளுக்கு “பெட்ரோல்” விநியோகிப்பதை “நிறுத்திய” போது- அன்றைய வெளிவிவகார செயலாளரான கேஸ்பர் வேயன்பேர்கரை உடனே சவுதிக்கு விளக்கம் கேட்க அனுப்பியது அமெரிக்கா’

விமான நிலையத்திலிருந்து அமெரிக்க வெளிவிவகார செயலாளரை கொதிக்கும் பாலைவனத்திற்கு அழைத்து சென்று அங்கு ஏற்பாடு செய்யப்ட்டிருந்த எந்தவித வசதிகளுமற்ற கூடாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு தட்டில் ரொட்டியும் இன்னொரு தட்டில் பேரீச்சப்பழமும் ஒரு குவழையில் பாலும் மறு குவழையில் ஸம்ஸம் தண்ணீரும் வைக்கப்ட்டிருந்தது.

அதை கேஸ்பர்வேயன் பேர்கருக்குகாட்டி, “இது தான் எங்கள் தலைவர் மாமன்னர் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை. இதை உண்டு கொண்டு தான் அவர் உலகை உலுக்கினார். அந்த மாமனிதரின் வாழ்வுக்கு நாங்கள் திரும்பத் தயார். முடிந்தால் மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்துக் கொள்ளட்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.மன்னர் பைஸலுக்குத் தேவைப்பட்டதெல்லாம் எந்த சொகுசுமில்லாமல் எங்களால் எவர் தயவுமின்றி வாழ முடியும் என்று அமெரிக்கர்களுக்கு உணர்த்தவேண்டும் என்பதே.

ஏனெனில் அல் குா்ஆனை மனனமிட்டு மார்க்கத்தை சரிவர கற்ற மன்னராக இருந்தார். அதனால் அவர் இதற்கெல்லாம் சிறுதுளி கூட அஞ்சவில்லை

வேயன்பேர்கேர் அமெரிக்கா திரும்பும் முன்னர் ஒரு வார்த்தையை மன்னரிடம் சொல்லி விட்டு சென்றான்.

“YOU WILL HAVE TO PAY FOR THIS”
(இதற்கான விலையை கொடுக்க வேண்டும்)

பின்னர் மன்னர் பைஸல் சவூதி அரேபிய கைகூலி ஒருவனால் சுட்டு கொலை செய்யப்பட்டார் எனவே அவர் பலஸ்தீனுக்காகக் கொடுத்த விலை அவரது விலை மதிப்பற்ற உயிரை மட்டுமே.

மன்னர் பைசல் அன்று எடுத்த முடிவு சரியானதாகவும் தைரியமானதாகவும் இருந்தது அதனால் என்னவோ அவர் இன்றுவரை பாராட்டப்படுகிறார் ஆனால் அவருக்கு பின்னால் வந்த யாரும் அமெரிக்காவுக்கு அடிபணியாமல் இருந்ததில்லை என்பதோடு பலஸ்தீன மக்களுக்கு இன்றுவரை விடுதலையும் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தமான உண்மையுமாகும்.

மன்னர் பைசல் எதிர்த்து நின்றது போன்று ராஜபக்ச அரசை முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கடந்த 52 நாள் பிரச்சினையின் போது எதிர்த்து நின்றது ஹகீமையும் ரிஷாட்டையும் அழைத்து ராஜபக்ச குடும்பம் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியது ஆனால் இறுதிவரை அவர்கள் இருவரும் அடிபணியவில்லை ராஜபக்ச அரசை எதிர்த்து நின்றதுடன் ராஜபக்ச அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வெற்றியும் பெற்றார்கள்.

அன்று அமெரிக்க தூதர் சொன்னது போன்று இதன் விளைவை வெகுவிரைவில் அனுபவிப்பீர்கள் என்று ராஜபக்சே அரசு சொன்னது நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளவில்லை 52நாள் ஆட்சிமாற்ற பிரச்சினை ஏற்பட்ட சில மாதங்களில் இலங்கை நாட்டையையே உலுக்கிய ஸஹ்ரான் எனும் கயவனின் தற்கொலைத் தாக்குதல் அதாவது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்றிருந்தது. அதன் பிறகு இலங்கை முஸ்லிம்கள் பெரும் சவாலுக்குட்படுத்தப்பட்டிருந்தனர். இலங்கை முஸ்லிம்களை நோக்கி இனவாதம் கொதித்தெழுந்தது.

முஸ்லிம் சமூகம் தலை குனிந்தது. அத்தனை முஸ்லீம்களையும் தீவிரவாதிகளாக காட்டினார்கள் பள்ளிகளுக்குள்ளே நாய்கள் இழுத்துச் செல்லப்பட்டன, கத்தி வைத்திருந்தார் என்பதற்காக வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர், ஊடகங்கள் செய்திகளை திரிவுபடுத்தினார், ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை எமது நாட்டின் இறைமையை மீறாதவாறு செயற்படுத்துவதற்கான இராஜதந்திர நடவடிக்கையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர்,

சஜித் பிரேமதாச ஒரு வார்த்தை கூட பேசவில்லை மௌனியாக இருந்தார். குண்டு தாக்குதல் நடைபெற்று ஒரு சில வாரங்கள் கடந்திருக்கும் முஸ்லிம் பள்ளிகள் உடைக்கப்பட்டன, முஸ்லிம்களின் உடமைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன, முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்கள் அடியோடு அழிக்கப்பட்டன இத்தனைக்கும் இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா?

தாக்குதல் நடத்திய பேரினவாதிகளை வெளியேவிட்டார்கள், கைது செய்யப்பட்ட ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்கள், சட்டங்கள் கடுமையாக்க படவில்லை நஷ்டயீட்டுத்தொகைகள் வழங்கப்படவுமில்லை அத்தோடு முஸ்லிம்கள் கூட்டாக இராஜினாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், மரிக்கார் ஆகியோர் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடாத்தப்பட்ட போது நல்லாட்சி அரசாங்கத்தில் இருக்க வெட்கப் படுகின்றோம் என்று தெரிவித்திருந்தனர் அதற்க்கும் பல்வேறு காரணங்கள் இருந்தது.

இத்துணை விடயங்களும் நடந்து அதன் பின்னரும் கடந்த தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்காக காலம் நேரங்களை செலவு செய்து தேர்தல் களத்தில் புகுந்து விளையாடினார்கள்.

ஆனால் ஜனாதிபதி தேர்தல் தோல்வி என்பதுடன் ராஜபக்சே அரசு தொடர்ந்தும் அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தது ஆனாலும் கட்சியை விட்டுப் போகவில்லை ரணில் தலைமைப் பொறுப்பை கொடுக்கவில்லை என்பதினால் சஜித் பிரேமதாசவுக்கு புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு தைரியத்தையும் கொடுத்தார்கள்.

புதிதாக கட்சி ஆரம்பிக்கப்பட்டது. பாராளுமன்றத் தேர்தல் களத்திலே சஜித் பிரேமதாசவையும் மிஞ்சும் அளவுக்கு மும்முரமான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர் அதிலும் சஜித் அணிக்கு தோல்வியே கிடைத்தது.

தோல்வியடைந்தாலும் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது தானே ஒரு நல்ல தலைவனுக்கு அழகு ஆனால் தேசியப் பட்டியல் ஒவ்வொன்று தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிராகரிக்கப்பட்டது.

இறுதியில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கூட ஏமாற்றப்பட்டார் இப்படி துரோகம் செய்த போது வலிக்காத வலிகள் தற்பொழுது மட்டும் 20ம் சீர்திருத்தத்தை ஆதரித்த போது வலிக்கிறது என்றால் இனி ஒருபோதும் சிறிய கட்சி தானே என்று ஏமாற்ற நினைக்க மாட்டார்கள்.


இந்த நிலையில் மு.கா தலைவர் ரவூப் ஹகீம். அ.இ.கா தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இந்த 20ம் சட்ட திருத்தை ஆதரிக்கவில்லை இருந்தாலும் அவர்களின் முழு ஆதரவுடனும்தான் இது நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. என்றாலும் அவர்களின் கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரித்திருக்கின்றார்கள் எனவே சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் எடுத்த முடிவு எதிர்காலத்தில் நல்லதாக அமையும் என்பதே எனது வியூகம் பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்