யாழில் 9 மாத குழந்தையை காரசாரமாக தாக்கிய தாய் கைது



யாழ்ப்பாணம் – அரியாளை பகுதியில் ஒன்பது மாத குழந்தையொன்றை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில், தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குழந்தையை தாக்குவது தொடர்பான காணொளியொன்று சமூக வளைத்தளங்களில் பரவியிருந்த நிலையில், பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பின்னணியில், குறித்த தாய் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

24 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

குறித்த பெண், தனது குழந்தையுடன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியுள்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண், சில வருடங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் குவைட் நாட்டுக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாக்கப்பட்ட குழந்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்

அத்துடன், இவ்வாறான விடயங்கள் குறித்து விசேட கவனஞ் செலுத்துமாறு, சிறுவர் மற்றும் மகளிர் பணியத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்