ஹமாஸ் பிரதானியின் வீட்டை இலக்கு வைத்து, இஸ்ரேல் குண்டுத் தாக்குதல்


ஹமாஸ் இயக்க பிரதானியின் வீட்டை இலக்கு வைத்து, இஸ்ரேல் இராணுவம் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று அதிகாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சுமார் நான்கு பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதோடு பலர் இதன்போது காயமடைந்துள்ளனர்.

காசா எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ள இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் கடந்த ஏழு நாட்களாக வலுப்பெற்று வருகின்றது.

பலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா பகுதி அமைந்துள்ளது.

இதன்படி, குறித்த காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்து வருகின்ற நிலையில்., ஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையில் அவ்வப்போது மோதல் இடம்பெற்று வருகின்றது.

காசா பகுதியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது

இதற்கமைய, கடந்த ஏழு நாட்களாக மீண்டும் வலுப்பெற்றுள்ள போரில், காசாவில் இதுவரை 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, அவர்களில் 41 சிறுவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இரு தரப்புக்கும் இடையிலான மோதலில், இஸ்ரேலில் இதுவரை 10 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த திங்கட்கிழைமை முதல் இதுவரையான காலப்பகுதியில், காசாவிலிருந்து இரண்டாயிரத்து 300 ஏவுகனைகள் ஏவப்பட்டிருந்ததாகவும், அவற்றில் சுமார் ஆயிரம் ஏவுகனைகள் முறியடிக்கப்பட்டாகவும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஹமாஸ் மற்றும் ஏனைய இராணுவ குழுக்களை இலக்குவைத்து, தாம் இதுவரை ஆயிரம் ஏவுகனைகளை ஏவியுள்ளதாகவும், அவற்றில் 380 ஏவுகனைகள் காசா பகுதிக்குள் விழுந்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் தாம் அதிக கவனஞ் செலுத்தியுள்ளதாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் Fatou Bensouda தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பலஸ்தீனிய பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதன் மூலம் ஹமாஸ் இயக்கத்தினர், இரட்டை யுத்தக் குற்றத்தைச் செய்ததாக இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேல் இராணுவம் காசாவில் முக்கிய ஊடக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடமொன்றை குறிவைத்து, நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியிருந்தது

இந்த நிலையில், பொது மக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை கண்மூடித்தனமாக குறிவைப்பது, சர்வதேச சட்டங்களை மீறும் செயற்பாடாகும் எனவும், இவ்வாறான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் Antonio Guterres தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரு தரப்புக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு, சர்வதேச நாடுகள் பல தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்