ரிஷாட் பதியூதீன் அடுத்த வாரம் சபைக்கு – இணக்கம் தெரிவித்தார் மஹிந்த


தடுப்பு காவல் உத்தரவின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை, எதிர்வரும் சபை அமர்வுகளுக்கு கட்டாயம் அழைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான குழுக் கூட்டத்தின்போதே, அவர் இந்த இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.

எதிர்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்லவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த இணக்கத்தை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்வதற்கு சபாநாயகர், ரிஷாட் பதியூதீனுக்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும், ரிஷாட் பதியூதீன் சபைக்கு அழைத்து வரப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், ரிஷாட் பதியூதீனை பாராளுமன்ற அமர்வுகளுக்கு அழைக்காமையை அடுத்து, தொடர்ச்சியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்தனர்.

ரிஷாட் பதியூதீன், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளமையினால், அவரை சபைக்கு அழைக்க கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே, ரிஷாட் பதியூதீனை சபைக்கு அழைக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்