சிறுவன் துஷ்பிரயோகம்; ஆசிரியருக்கு மறியல்

எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் கைது செய்யப்பட்ட கடுவெல பிரதேசத்திலுள்ள பாடசாலை ஆசிரியரை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், கடுவெல பகுதியை சேர்ந்த 45 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவன் 8 வயதில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், அவருக்கு இப்போது 11 வயது என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி ஒன்றைப் பார்த்த பின்னர், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தனது தாயிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி சிறுவன் கூறியதாக அதிகாரசபையால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பப் பிரிவில் சிறுவன் கல்வி பயின்றபோது சந்தேகநபர் வகுப்பாசிரியராக இருந்தார் என்றும் பல சந்தர்ப்பங்களில் சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சிறுவன் தெரிவித்ததை அடுத்து, அவரது தாயார் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றுக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.

வலயக் கல்வி அலுவலகத்தினால் நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் போது குறித்த ஆசிரியர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அதன்படி கடந்த மாதம் சந்தேக நபரின் சேவை இடைநிறுத்தப்பட்டதாகவும்அதிகாரசபை நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், சந்தேக நபரை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்