சுகாதார அமைச்சிற்கு ஒரு வாரம் கால அவகாசம் : தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்



(எம்.மனோசித்ரா)


சுகாதார அமைச்சிற்கு ஒரு வார கால அவகாசத்தினை வழங்கி தொழிற்சங்க போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படா விட்டால் ஜனவரி 3 ஆம் திகதி முதல் மிகவும் இறுக்கமான முறையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.


இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாக 4 தினங்களாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் எமது கோரிக்கைகளுக்கான தீர்வினை வழங்க 24 மணித்தியாலங்கள் கால அவகாசம் கோரப்பட்டது.


அதனையடுத்து 20 மணித்தியாலங்களின் பின்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.


விசேட வைத்திய நிபுணர்களின் இடமாற்றம், தர வைத்தியர்களின் நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளமையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.


இவ்வாறான சிக்கல்களின் காரணமாக சுகாதார அமைச்சிற்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி, தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளோம்.


எனினும் ஜனவரி 3 ஆம் திகதி மத்திய குழு கூட்டத்தின் பின்னர் இது தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்