(ஆர்.யசி)
ஊடகவியலாளர் ஒருவரை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முயற்சி மற்றும் ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றமை வெள்ளை வேன் கலாசாரம் அல்ல எனக்கூறும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இந்த சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் மட்டுமே அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
வலுசக்தி அமைச்சில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெள்ளை வேன் கலாசாரம் என்பது ஒன்று இரண்டு சம்பவங்களில் ஈடுபடுவதல்ல. தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அவ்வாறு கூற முடியும். எனவே வெள்ளை வேன் கலாசாரம் உருவாக்கியுள்ளது என்ற தீர்மானத்திற்கு வர வேண்டாம்.
ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பில் இப்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன, குறித்த ஊடகவியலாளர் கூறிய விடயங்களின் மூலமாக நொந்துபோன ஒருவரே இந்த செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும்.
இது கோபத்தில் செய்யும் வேலையாக தெரியவில்லை, திட்டமிட்டு இவ்வாறான ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்த வலியுறுத்தியுள்ளோம். குறித்த விசாரணையில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பது குறித்து நாமும் அவதானத்துடன் உள்ளோம்.
கடந்த 2010-2015 ஆம் ஆண்டுகளில் இதே நிலைமைகள் காணப்பட்ட நிலையில் நாம் ஊடகவியலாளர்களுடன் நின்றோம், இப்போதும் நாம் ஊடகவியலாளர் பக்கமே நிற்கின்றோம்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் மட்டுமே அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படும். எனவே முறையான விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறிய வேண்டும் என்பதே நாமும் வலியுறுத்திக் கொண்டுள்ளோம் என்றார்.
Post a Comment