பணம் அச்சிடுவதை உடனடியாக நிறுத்துங்கள் ; இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்.
இலங்கையினால் இனியும் கடன் சுமையை சுமக்க முடியாது.
எனவே, பணம் அச்சிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் பண ஸ்திரமின்மையைத் தடுக்க வட்டி விகிதங்கள் மற்றும் வரிகளை உடனடியாக உயர்த்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த வருட ஆரம்பத்தில் இலங்கை தொடர்பாக முன்னெடுத்திருந்த மீளாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எதிர்காலப் பொருளாதாரம் சிறப்பானதாக அமையாது என்பதோடு, நாட்டின் கடன் சுமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடு எதிர்ப்பார்க்காதளவில் நாட்டில் அதிகரித்திருக்கும் அரச கடன், குறைந்த வெளிநாட்டு கையிருப்பு மற்றும் எதிர்வரும் வருடங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிதித் தேவைகள் உள்ளிட்ட சவால்களை நாடு எதிர்க்கொள்ள வேண்டிவரும்.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க நம்பகமான மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கான தேவையுள்ளதுடன், பாதிக்கப்படக்கூடிய தரப்பினரை பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் வறுமையை குறைக்க வேண்டும்.
2019ஆம் ஆண்டில் நாட்டின் வரிகளைக் குறைத்து ‘உற்பத்திப் பொருளாதாரத்தை’ உருவாக்குவதற்காக, நிதி அச்சடிப்பில் ஈடுபட்டமையே நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு காரணமாகும்.
2021ஆம் ஆண்டில் இலங்கை 1.2 டிரில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. இதனால், பணவீக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் வரிக் குறைப்புகள் உள்ளிட்ட முக்கிய கொள்கை மாற்றங்களால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குதல், பொதுவாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு சூழலை வலுப்படுத்தல், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை தொலைநோக்கு பார்வையுடன் நிர்வகித்தல் மற்றும் ஊழலை எதிர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகள் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க வழி வகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments: