Headlines
Loading...
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக ரீதியில் தீர்வு காண முடியும் - சபாநாயகர்

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக ரீதியில் தீர்வு காண முடியும் - சபாநாயகர்



(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)


நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக ரீதியில் தீர்வு காண முடியும். அதற்காக இந்த வார இறுதிக்குள் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான பொதுவான வேலைத்திட்டத்தை வகுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை [06.04.2022] விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டு நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் ஆராய்வதற்கு கட்சித் தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது உக்கிரமடைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.


நாட்டில்,எரிபொருள் தட்டுப்பாடு, கேஸ் மற்றும் மின்சார நெருக்கடி என்பவற்றுக்கு மேலதிகமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது, நாட்டில் இன்று பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதனைத் தீர்ப்பதற்கு எல்லோரும் கட்சி பேதமின்றி செயற்படவேண்டியது அவசியம்.


அத்துடன் யார் தவறு செய்தார் என்பதை விட தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும். கூட்டாக இணைந்து முடிவு எடுக்க வேண்டும்.


ஜனநாயக சூழலில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நாம் தவறினால் அது பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோல்வியாகும். அப்பாவி மக்களின் உயிர்களில் இது நிறைவடையலாம். அவ்வாறான அனுபவம் எனது அரசியல் வாழ்வில் கண்டுள்ளேன்.


கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாப்பவர் என்ற வகையில் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றேன்.


எனவே நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக ரீதியில் தீர்வு காண முடியும். அதனை நாங்கள் செய்ய தவறினால் அதனால் பாதிக்கப்படப்போவது முழு பாராளுமன்றமுமாகும்.


அதனால் இந்த வார இறுதிக்குள் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான பொதுவான வேலைத்திட்டத்தை வகுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.


நாங்கள் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கையிலேயே ஆயிரக்கணக்கான உயிர்களின் பெறுமதி மற்றும் பாராளுமன்றத்தின் கெளரவம் தங்கி இருக்கின்றது என்றார்.

0 Comments: