ரம்புக்கனையில் பவுசர் தீப்பிடிக்கும் பகுதியில் நின்றிருந்த சந்தேகநபர் CID யினரால் கைது
கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எரிபொருள் பவுசருக்கு தீ வைத்த சந்தேகநபரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


ரம்புக்கனை, பின்னவல வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவத்தின்போது, பச்சை நிற ரீசேர்ட்டும், இராணுவ ஆடைக்கு ஒப்பான காற்சட்டையும் அணிந்திருந்த குறித்த சந்தேகநபர் புகையிரத பாதை குறுக்காக நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் பவுசரின் முன்னால் தீப்பிடிக்கும் பகுதியில் இருந்த ஏதோ பொருள் ஒன்றை எடுத்து வீசி விட்டு அங்கிருந்து செல்லுகின்ற வீடியோ காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றது.


அதற்கமைய குறித்த சந்தேகநபர் இன்றையதினம் (23) கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


குறித்த சம்பவத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் பலர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை CIDயினர் மேற்கொண்டுள்ளனர்.