21ஆவது திருத்தத்தை தோற்கடிக்க ஆளும் தரப்பிற்குள் ஒரு தரப்பினர் சூழ்ச்சி - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி


(இராஜதுரை ஹஷான்)


நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள பின்னணியில் அமைச்சரவை அமைச்சர்கள் பொதுமக்களுக்கு பிறிதொரு சுமையாக உள்ளார்கள். 40 இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறானது. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை தோற்கடிக்க ஆளும் தரப்பிற்குள் ஒரு தரப்பினர் சூழ்ச்சி செய்கிறார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்தினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியை தோற்றுவித்து சமூக கட்டமைப்பில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.


நாட்டில் ஜனநாயகத்தை நிலைப்படுத்தல், ராஜபக்ஷ குடும்பத்திடமிருந்து நாட்டை பாதுகாத்தல், அரசியமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்தல் உள்ளிட்டவை நாட்டு மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளன. மக்களின் நிலைப்பாட்டிற்கு மதிப்பளிக்கும் வகையில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்ட மூல வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய அரசாங்கத்தின் கட்டமைப்பு எத்தன்மையிலானது என்பது விளங்கவில்லை. அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை முறையற்ற வகையில் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி மக்கள் வெறுத்த பழைய விடயங்களையே தற்போதைய அரசாங்கம் செயற்படுத்துகிறது.


பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.


பிரதமர், அமைச்சரவை மற்றும் அமைச்சரவையின் செயலாளர்கள் தேசிய சபையின் ஊடாக தெரிவு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.


சர்வ கட்சி அரசாங்கத்தினை ஸ்தாபித்து அதனூடாக அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளவும், சர்வ கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காமல், சுயாதீனமாக செயற்பட்டு அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளார்கள்.


ஒரு சில அரசியல் கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாட்டு மக்கள் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்துள்ள வேளையில் ஒரு தனி நபரை இலக்காகக் கொண்டு முழு அரசியல் திருத்தத்தை எதிர்ப்பது முறையற்றதாகும்.


பொதுத் தேர்தல் இடம்பெறாமல் மக்கள் தமக்கான தலைவரை தெரிவு செய்துகொள்வார்கள். தவறுகளை திருத்திக் கொள்ள 21ஆவது திருத்தத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை தோற்கடிக்க ஆளும் தரப்பிற்குள் ஒரு தரப்பினர் சூழ்ச்சி செய்கிறார்கள். 21ஆவது திருத்தத்திற்கு எதிராக செயற்படுபவர்களை நாட்டு மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.


ஒரு தனி நபரை பாதுகாக்க மக்கள் அரசியல்வாதிகளை பாராளுமன்றிற்கு அனுப்பவில்லை. நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள வேளையில் தற்போதைய அமைச்சரவை மக்களுக்கு பிறிதொரு சுமையாக உள்ளது.


நடைமுறைக்கு சாத்தியமற்ற வகையில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. 40 இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறானது.


நாட்டு மக்களின் எதிர்ப்பிற்கமைய தற்போதைய அரசாங்கம் செயற்பட்டால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எதிர்கொண்ட பாரதூரமான விளைவுகளை தற்போதைய அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்றார்.