பாத்திமா ஆயிஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்!

 


காணாமல் போயுள்ள 9 வயது பாத்திமா ஆயிஷாவை தற்போது நான்கு பொலிஸ் குழுக்கள் தேடி வருகின்றன.இதற்கமைய சிறுமியின் தந்தையிடம் விசாரணைக் குழு நீண்ட நேரம் விசாரித்து வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளார். 


ஆனால் அவள் வீடு திரும்பவில்லை. கடைக்கு அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் அவர் கடைக்கு வருவதும் மீண்டும் வெளியே செல்வதும் பதிவாகியுள்ளது. 


சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு மேலதிகமாக பானந்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


இதேவேளை, பானந்துறையில் வசிக்கும் சிறுமியின் நெருங்கிய உறவினர் ஒருவர் தொடர்பிலும் விசாரணைக் குழு கவனம் செலுத்தியுள்ளது. புறக்கோட்டை பிரதான பேருந்து நிலையத்தில் பெண் ஒருவருடன் சிறுமி இருப்பதாக முகநூல் பக்கம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. 


இதன்படி, கொழும்பு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்க பண்டாரகம பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். 


சிறுமி காணாமல் போவதற்கு முந்தைய நாள் இரவு அணிந்திருந்த உடையை மோப்பம் பிடித்த பொலிஸ் மோப்ப நாய் "ட்ரோணோ" சிறுமி கோழி இறைச்சி வாங்கச் சென்ற கடை வரை சென்று நின்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


காணாமல் போன சிறுமியின் தாய்...


"எப்படியாவது என் குழந்தையைக் காப்பாற்றித் தாருங்கள். எனக்கு என் குழந்தை வேண்டும். அனைவருக்கும் புண்ணியம் கிடைக்கும். 


சிறுமி குறித்து ஏற்கனவே 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன் அவரை தேடுவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.