பொதுமக்களிடம் முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ள வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர!



தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் சேமிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் நாளாந்தம் பொதுமக்கள் அவற்றை விநியோகிக்குமாறு கோரி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியன மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்ந நிலையிலேயே வலுச்சக்தி அமைச்சர் மேற்கண்டவாறு பொது மக்களிடம் வேண்டுகோளை விடுத்துள்ளார்.


இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் வலுசக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.


அவ்வாறு மக்கள் போராட்டங்களிலோ அல்லது ஏதேனும் அசௌகரியமாக நடந்துகொண்டாலோ குறித்த எரிபொருள் நிலையத்திலோ அல்லது சமையல் எரிவாயு விநியோகிக்கும் இடங்களிலோ அனைத்து விநியோக நடவடிக்கைகளும் முற்றாக நிறுத்தப்படும்.


அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்க முடியாதெனவும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.