மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வு


அனைத்து மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக ஹட்டனில் மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


தக்காளி கிலோ 800 ரூபாய், கேரட் ஒரு கிலோ ரூ.400, மிளகாய் கிலோ 400 ரூபாய், கத்தரி கிலோ 450 ரூபாய், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 300 ரூபாய், ஒரு கிலோ வெண்டைக்காய், பீட்ரூட், கோவா ரூ.300, ஒரு கிலோ பச்சை மிளகாய் சுமார் ரூ.600 விற்பனை செய்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.


மரக்கறிகள் அனைத்தும் ஒரு கிலோ கிராம் 400 ரூபாவுக்கும் அதற்கு மேலதிகமாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


விவசாயிகளுக்குத் தேவையான இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்கள் இன்மையே மரக்கறி விளைச்சல் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என அகில இலங்கை கூட்டுப் பொருளாதார மத்திய நிலையங்களின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


கடந்த பருவத்தில் விவசாயிகள் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்களை வைத்திருந்ததாகவும், தற்போது அந்த இருப்புக்கள் குறைவடைந்துள்ளதால் மரக்கறிச் செய்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.