இலங்கையில் 35 வீதமானோருக்கு மாத்திரமே இணைய வழிக் கல்வி கிடைக்கப்பெற்றுள்ளது


எந்தவொரு பிரச்சினைகளின் போதும், அதனைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காது பாடசாலைகளையே மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டின் நெருக்கடி நிலைமையைக் கையாள்வதற்காக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாடு மூடப்படவுள்ளதாகவும், இதனூடாக பாடசாலைகளும் மூடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கோட்டாபய – ரணில் அரசாங்கத்துக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாததாலேயே நாடு மூடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டை மூடுவதற்கு பதிலாக அவர்கள் இருவரும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் 35 வீதமானோருக்கு மாத்திரமே இணைய வழிக் கல்வி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், தொழிநுட்ப வளர்ச்சியடைந்த பின்லாந்திலும் 60 வீதம் மாத்திரமே இணைய வழிக் கல்வி வெற்றியளித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இணைய வழிக் கல்வி முழுமையாக வெற்றியளிக்காத ஒரு திட்டமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.