எரிபொருள் கூப்பன்: காஞ்சனவிடம் கேள்விநாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கூப்பன் முறையில் எரிபொருள் வழங்கும் நடைமுறை குறித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடயம் கேள்வி எழுப்பியுள்ளார்.


கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்குறிப்பிட விடயத்தை அவர் தெரிவித்தார்.


சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இரண்டு வாரங்கள் வரை டீசலைப் பெறவில்லை என்றும் கூப்பன் முறையில் எரிபொருளை வழங்குவதற்கான அமைச்சரின் முன்மொழிவை கண்டனம் செய்வதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த முறைமை பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் என்றும் குறிப்பிட்டார்.


பொருளாதாரத்தை செயல்பட வைப்பதற்கு பொதுமக்களுக்கு எரிபொருள் தேவை என்றும் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் முயற்சியில் அமைச்சர் செயல்படுகிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.


பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெறும் ஊழல் அகற்றப்பட வேண்டும் எனவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க பொருத்தமான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.


கூப்பன் முறையும் கறுப்புச் சந்தையை உருவாக்கும் என்று குறிப்பிட்ட அவர், நாட்டுக்கு எரிபொருளைப் பெறுவதற்கான திட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சரை வலியுறுத்தினார்.


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவை நாட்டுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும், இந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதியளிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.