மன்னாரில் சகோதரர்களான குடும்பஸ்தர்கள் இருவர் வெட்டிக் கொலை : மூவர் வைத்தியசாலையில் அனுமதி


மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் நேற்று (10) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் மன்னார் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் என தெரிய வந்துள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், கடந்த வாரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் மாட்டு வண்டிச் சவாரி போட்டி இடம் பெற்றுள்ளது. இதன்போது தர்க்க நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் நொச்சிக்குளத்தில் வசித்து வருகிறார். அவருடனும் மாட்டு வண்டி சவாரியின் போது நொச்சி குளத்தைச் சேர்ந்த சிலர் தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று வெள்ளிக்கிழமை (10) காலை குறித்த நபர் நொச்சிக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மாடு கட்டச் சென்றுள்ளார்.


இதன்போது மாட்டு வண்டி சவாரியின் போது தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த நபர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்போது காயமடைந்த குறித்த நபர் காயமடைந்து பிரதான வீதிக்கு ஓடி வந்துள்ளார். இதன்போது வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இந்த நிலையில் குறித்த நபர் தாக்கப்பட்டமை குறித்து, வாள் வெட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் உயிலங்குளத்தை சேர்ந்த சகோதரர்களான யேசுதாசன் றோமியோ (40) மற்றும் யேசுதாசன் தேவதாஸ் (33) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் நொச்சிக்குளம் கிராமத்திற்குள் சென்றுள்ளனர்.


இதன்போது குறித்த இருவரையும் வீதியில் இடை மறித்து கதைத்துக் கொண்டிருந்த போது பாரிய கத்திகளால் குறித்த இருவரையும் வெட்டியுள்ளனர்.


இதன்போது குறித்த இருவரும் தமது உயிரை பாதுகாக்க ஓடியபோது துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர்.


இந்த நிலையில் குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.


தற்போது மன்னார் வைத்தியசாலையில் குறித்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மூவர் சிகிச்சை பெற்று வருவதோடு, இருவர் உயிரிழந்துள்ளனர்.


குறித்த சம்பவம் மன்னார் மாவட்டத்தில் பாரிய அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.


நியாயம் கேட்கச் சென்ற போதே குறித்த சகோதரர்கள் இருவர் துடி துடிக்க வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த சகோதரர்கள் இருவரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.


மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


(மன்னார் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)