முழு நேர அரசியலில் ஈடுபடுமாறு பிரதமர் பணிப்புரை...


முழு நேர அரசியலில் ஈடுபடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.


இதன்படி , ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவிற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அதற்கமைய ,நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியை போக்குவதற்கு தனது முழு நேரத்தையும் அர்ப்பணித்துள்ள நிலையில், கட்சியின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில், இந்த பணிப்புரைகளை விடுத்துள்ளார்.


மேலும் ,பிரதமரின் பணிப்புரைக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார எதிர்காலத்தில் கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளார்.