ஜனாதிபதியின் இல்லத்தில் பணத்தினை எண்ணியவர் கைது!

 
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கொழும்பு 14, மல் மாவத்தையினைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


அத்துடன், குறித்த சந்தேக நபர் கொழும்பு ஹுசேனியா வீதியிலுள்ள கடையொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பொதுமக்கள் அரச கட்டடத்தை முற்றுகையிட்டதன் பின்னர் காணப்பட்ட பணத்தை எண்ணிக் கொண்டிருந்த ஒருவரே இவர் என்பதும் தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை சிலர் எண்ணும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதன் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.