முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய அநீதிகளை ஏற்படுத்திய அரசாங்கம் அரபு நாடுகளிடம் உதவி கோர வெட்கப்பட வேண்டும்

 


( ஐ. ஏ. காதிர் கான் )


கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம்

 சமூகத்துக்கு ஏற்படுத்திய அநியாயங்கள், வேறு எந்த அரசாங்கத்தினாலும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில், அரபு நாடுகளுக்குச் சென்று உதவி கேட்பதற்கு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு காரியாலயத்தில் நேற்று முன் தினம் (29) நடந்த  செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

   அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத்  தெரிவிக்கையில்,

   நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது. அப்படி பணம் இருந்தாலும், மக்களுக்கு பெற்றுக் கொள்வதற்கு அத்தியவசியப்  பொருட்கள் இல்லை. சிறிமாவோ  அம்மையாரின் காலத்திலும் மக்கள் அத்தியவசியப்  பொருட்களுக்கு வரிசையில் காத்திருந்தார்கள்.


 ஆனால், அன்று மக்களுக்குத்  தேவையான பொருட்கள் இருந்தன. மக்களுக்குத்  தேவையான அத்தியவசியப்  பொருட்களை விநியோகிப்பதில், இந்த அரசாங்கத்தைத் தவிர வேறு எந்த அரசாங்கமும் தோல்வியடைந்ததில்லை.

   அத்துடன், தற்போது  ஏற்பட்டிருக்கும் எரி பொருள் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என,  அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. பல நாடுகளிடமும் எரி பொருள் உதவிகளைக் கேட்டபோதும், இந்த அரசாங்கத்துக்கு உதவி செய்ய யாரும் தயாராக இல்லை.

   இறுதியாக, அரசாங்கம் அரபு நாடுகளிடம் தற்போது உதவிகளைக் கோரி வருகின்றது. அரபு நாடுகளிடம் எரிபொருள் உதவி கோருவதற்கு,  அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.


   இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே, முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய அநீதிகளை இழைத்து  வந்திருக்கின்றது.

குறிப்பாக, கொவிட் தொற்றினால்  மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்காமல் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு, அரபு நாடுகள் கூட்டாக ஜனாதிபதியிடம் கோரி இருந்தது.


   எனினும், ஜனாதிபதி அவர்களின் அக்கோரிக்கைகளை நிராகரிக்கும் வகையில், எந்த விதமான பதிலையும் அவர்களுக்கு வழங்கவில்லை.

   இந்நிலையில்,  அரசாங்கம் தற்போது எரி பொருள் பிரச்சினைக்கு உதவுமாறு, அரபு நாடுகளைக் கேட்டு வருகின்றது. 


   நாடு தற்போது எதிர் கொண்டுள்ள எரி பொருள் பிரச்சினைக்கு, அரபு நாடுகள் உதவி செய்ய முன்வர வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

   ஆனாலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பார்த்து, எந்த நாடும் எமக்கு உதவப் போவதில்லை.

   மாறாக, இலங்கை வாழ் அனைத்து மக்களுக்காகவும்  அவர்கள் உதவி செய்வார்கள் என்றே நாங்கள் நம்புகின்றோம்.


   மேலும், ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான, எதேச்சதிகாரமான தீர்மானம் காரணமாகவே,

நாட்டில் உணவுப்  பொருட்களுக்குத்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


   விவசாயம்

தொடர்பான அறிவு, அனுபவம் உள்ளவர்களிடம் எந்தவிதமான  ஆலாேசனைகளையும் கேட்காமல், ஜனாதிபதி  இரசாயண உரத்தைத் தடை செய்தார். 

   20 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு வழங்கிய அதிகாரங்களே, அவர் இவ்வாறு தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதற்கு பிரதான  காரணமாகும்.

   அதனால், 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த அனைவரும்,  ஜனாதிபதியின் முட்டாள் தனமான தீர்மானங்களுக்குப்  பொறுப்புக்   வேண்டும்.

   எனவே, மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு,  ஜனாதிபதி தனது பதவியைத்    துறக்க வேண்டும். 


   இன்னும் இரண்டு வருடங்கள் கோத்தாபய ராஜபக்ஷ் அதிகாரத்தில் இருந்தால், எமது நாடு சோமாலியாவை விட மிக மோசமான நிலைக்குச்  சென்று விடும் என்றார்.


( ஐ. ஏ. காதிர் கான் )