இன்றைய ஜனாதிபதி தெரிவு மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை – அனுரகுமார திஸாநாயக்க


பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய வாக்கெடுப்பில் மக்களின் தெரிவு பிரதிபலித்தது என ஒருவர் நம்பினால் அது கட்டுக்கதை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் பின்னர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இன்றைய வாக்கெடுப்பு மக்களின் அபிலாஷைகளின் சிதைந்த பிம்பமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.


இன்று அளிக்கப்பட்ட வாக்குகளின் கலவையானது பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள மக்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும், பொது மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் நிலைப்பாட்டிற்கும் இடையே பெரும் முரண்பாடு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


தமிழ் தேசிய கூட்டமைப்பு, 10 சுயேட்சை அரசியல் குழுக்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்த வாரம் பாராளுமன்றத்தில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இந்த அனைத்து ஆதரவுடனும் பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும 113 வாக்குகளைப் பெற்றிருப்பார்.


எவ்வாறாயினும், இந்த அரசியல் கட்சிகள் நீண்ட கால நோக்கில் தமது தீர்மானத்திற்கு இணங்குவார்களா என்றும், கொள்கைகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


நாட்டின் தீர்க்கமான தேர்தல் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளுக்காக விலைக்கு வாங்கப்பட்டதை தாங்கள் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.


புதிய பொது வாக்கெடுப்புக்கு வழி வகுக்கும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் அழைப்பு விடுத்துள்ளார்.