"நாளை ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் SJB - கோட்டா பதவி விலகும் வரை அங்கேயே தங்கியிருப்போம்" - ரஞ்சித் மத்தும பண்டார!

நாளை (09) ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி வளைத்து முற்றுகையிடும் தமது கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை அங்கேயே தங்கியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று தெரிவித்துள்ளது.


'நாங்கள் கோட்டை ரயில் நிலையத்தில் ஒன்றுகூடி, பின்னர் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்வோம். ஜனாதிபதி பதவி விலகும் வரை அங்கேயே இருப்போம்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இன்று (08) நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.


"அதிகாரத்தைக் மீட்டெடுப்பதற்கான இறுதிப் போராட்டத்தில் இணையுமாறு அனைத்து மக்களையும் நாங்கள் அழைக்கிறோம். அதேவேளை, உயர்மட்டத்தின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினரையும் பொலிசாரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், அவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்" என்றும் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது கூறினார்.


"மேலும், மக்கள் இன்று தலைநகருக்கு வருவதை தடுக்கும் வகையில், எரிபொருள் விநியோகத்தை நிறுத்துமாறு அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிகிறோம். ரயில் போக்குவரத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முயற்சிகள் மூலம் மக்கள் போராட்டத்தை முடக்க முடியாது.


ஜனாதிபதி மட்டுமல்ல பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தோல்வியடைந்தவர் என்பது நிரூபணமாகியுள்ளதால் அவரும் பதவி விலக வேண்டும்" என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.கள் வலியுறுத்தியுள்ளனர்.