அமைச்சுப் பதவியேற்க எதிரணியிலுள்ள தமிழர்களும் தயார்


“எதிரணியில் பலர் சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பது மட்டுமன்றி அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்கத் தயாராகவுள்ளனர். அதில் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர். தம் இனம் சார்ந்த மக்களின் நலன் கருதி அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்க அவர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.”

– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வகட்சி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டவுடன் சர்வகட்சி அமைச்சரவையும் நியமிக்கப்படும். ஆளும் – எதிர்த்தரப்பு என்று வேறுபாடின்றி மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஓரணியில் சங்கமித்து சர்வகட்சி அரசை நிறுவ வேண்டும். அப்போதுதான் பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டை மிக விரைவாக மீட்டெடுக்க முடியும்.

கட்சி அரசியல் செய்து ஆட்சி நடத்தினால் அதனால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. சர்வதேச நாடுகளும் எமக்கு உதவி புரிய முன்வரமாட்டா. எனவே, கட்சி அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு நாட்டுக்காக – மக்களுக்காகப் பலமான சர்வகட்சி அரசை நாம் ஒன்றிணைந்து நிறுவ வேண்டும்” – என்றார்.