இலங்கையில் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வு !

 
நாட்டில் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகன உதிரி பாகங்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இதற்கமைய, மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள், பேருந்துகள் போன்றவற்றின் சில்லுகள், பெட்டரிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.


நீண்ட நாட்களாக சந்தையில் சில உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்படாமையினால் வாகன உதிரி பாகங்களின் விலை நூற்றுக்கு முன்னூறு சதவீதம் எனும் விகிதத்தில் அதிகரித்திருப்பதாகவும், இதன் காரணமாக வாகனங்களை பராமரிக்க முடியாமல் பாவனையாளர்கள் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.


இந்நிலையில் 4000 முதல் 5000 ரூபா வரையில் இருந்த மோட்டார் சைக்கிள் சில்லுகள் தற்போது 12,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.


3600 ரூபாவாக இருந்த மோட்டார் சைக்கிள் பேட்டரி 9000 ரூபாவை தாண்டியுள்ளதாகவும், 450 ரூபாவாக இருந்த பிரேக் லைனர் 1200 ரூபாவாகவும், 4000 ரூபாவாக இருந்த செயின் ஸ்ப்ராக்கெட் 9000 ரூபாவாகவும்,800 ரூபாய்க்கு விற்கப்பட்ட மசகு எண்ணெய் 1600 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.


இதேவேளை, 35,000 ரூபாவாக இருந்த பேருந்தின் சில்லுகள் 75,000 ரூபாவாகவும், 24,000 ரூபாவாக இருந்த பேட்டரிகள் 70,000 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.


வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறு உதிரி பாகங்களின் விலை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.