கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் : காப்பாற்றிய பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர் !பாணந்துறை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பாணந்துறை பிரதேச பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர் காப்பாற்றியுள்ளனர்.


களுத்துறை வடக்கு, கல்பட டயகம பிரதேசத்தில் வசிக்கும் 29 மற்றும் 35 வயதுடைய தம்பதியரும், 13 மற்றும் 29 வயதுடைய அவர்களது சகோதர, சகோதரிகளுமே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.


இந்த நால்வரும் நேற்று (25) மாலை 4.30 மணியளவில் பாணந்துறை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தபோது அலையில் சிக்கி சுமார் 50 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


இதனையடுத்து பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் உயிர் காப்பு பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சுழியோடிகள் உடனடியாக செயற்பட்டு அவர்கள் அனைவரையும் காப்பாற்றியுள்ளனர்.


இதனையடுத்து காப்பாற்றப்பட்ட நால்வரும் பாணந்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.