* தமிழ் சகோதரர் ஒருவர் உணவும் பாதுகாப்பும் தந்து உறங்க வைத்தார்.
* நெற்றியில் திருநீறு பூசி என்னை தமிழ் கிராமத்துக்கு அழைத்து சென்று பின் என்னை பள்ளிவாயலில் ஒப்படைத்தார்.
* இரத்தக் கறையுடன் காட்டில் பாய்ந்து விடியும் வரை புதருக்குள் மறைந்திருந்தேன்.
* ஜனாதிபதி ஆர். பிரேமதாச எங்களை சரணடையுமாறு அன்று எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
* கருணா எங்களை கொன்று விடுமாறு உத்தரவு வழங்கியிருந்தார்.
* நான் இறந்து விட்டதாக பொலிஸ் அறிவித்திருந்ததால் வீடு திரும்பிய என்னை வீட்டார் அச்சமடைந்து வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
* பொலிஸ் சேவையில் இருந்த அநேகமான தமிழ் அதிகாரிகள் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டனர்.
1990 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு திருக்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட 79/78 பேரில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஒருவரான பலாங்கொடையை சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் அப்துல் லத்தீப் நஜிமுதீன் அவர்கள் புலனாய்வு ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடன் நடத்திய நேர்காணலில் தெரிவித்த திகில் அனுபவங்கள் பற்றிய விபரம் வருமாறு,
இவர் தற்போது ஒரு பிரபலமான இரத்தினக்கல் வர்த்தகராக உள்ளார் .
பலாங்கொடை பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவராக தற்போது கடமையாற்றுகிறார். ஒரு சிறந்த சமூகப் பணியாளராக கல்வி சமூகப் பணிகளுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருகிறார் .
அன்று 1990 ஜூன் 11 ஆம் திகதி அக்கறைப்பற்று பொலீஸ் நிலையம் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டது 78 பொலீஸ் உத்தியோகத்தர்கள் கடத்தி செல்லப்பட்டு திருக்கோவில் நெசவு நிலையம் ஒன்றில் கைகள் (பின்னால்) கட்டப்பட்டு கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிலத்தில் படுக்க வைக்கப்பட்டு துப்பாக்கிகளால் நாம் சுடப்பட்டோம் தெய்வாதீனமாக என் மீது துப்பாக்கி சூடுபடவில்லை.
சூடு நடத்தப்பட்ட பின் அவர்கள் ஒவ் வொருவராக யாராவது உயிருடன் இருக்கிறார்களா என பரீட்சிப்பதற்காக எங்களின் உடம்புகளில் ஏறிப் பார்த்தனர்.
என் உடம்பிலும் ஏறி நடந்தனர் நான் மிகவும் பொறுமையாக வலியைதாங்கினேன் பக்கத்தில் இருந்த தடித்த பொலீஸ் அதிகாரியின் தோல் பட்டையில் தலை வைத்து இறந்தது போல நடித்தேன் என் முகத்திலும் உடம்பிலும் அடுத்தவர்களின் உடல் சிதறிய இரத்தம் ஓடியது. அனைவரும் இறந்து விட்டார்கள் என உறுதிப்படுத்திக் கொண்ட அவர்கள் ஒரு கிரனைட் ஒன்றையும் எம்மீது வீசினார்கள் அதில் ஒரு துண்டு என் நெற்றியில்பட்டது.
எமது பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றிய தமிழ் அதிகாரியின் சகோதரர் ஒருவர் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்தார். இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற உள்ளதாக எமது OIC இற்கு அவரே தகவல் வழங்கி இருந்தார் எனவே, OIC சம்பவம் இடம் பெறும் போது பொலீஸ் நிலையத்தில் இருக்கவில்லை.
நாம் சுற்றி வளைக்கப்பட்டுள்ள விடயத்தை பொலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்த போது யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றி பேசிக் கொண்டு இருப்பதால் எங்களை அவர்களிடம் சரணடையுமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
பொலீஸ் நிலையத்திலிருந்த தமிழ் அதிகாரிகள் கொல்லப்படவில்லை அவர்கள் வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்பட்டது .
முன்னாள் இராணுவ தளபதி டென்சில் கொப்பேகடுவவிடமும் நான் பணியாற்றி இருக்கிறேன் ஆனால் உயிர்த்தப்பி வந்த எனக்கு பதவி உயர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது வேதனையாக இருக்கிறது ஒரு இலட்சம் ரூபா அன்பளிப்பு பணம் மட்டும் கிடைத்தது அதன் பின் சேவையிலிருந்து நான் விலகினேன்.
இந்தளவு பாதிக்கப்பட்ட நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்கள் பணம் வேண்டுமா பதவி உயர்வு வேண்டுமா அதனை அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் கூறுங்கள் என ஊடகவியலாளர் சமுதித கேட்ட போது எனக்கு எதுவும் வேண்டாம் என்னோடு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நியாயத்தைப் பெற்று கொடுக்குமாறு வேண்டுகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.