Headlines
Loading...
கண்டி வன்செயல் பாதிப்புகளை மதிப்பீடுசெய்ய அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கண்டி வன்செயல் பாதிப்புகளை மதிப்பீடுசெய்ய அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.



கண்டி வன்செயலில் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்து விபரங்களை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக்ஷமன் கிரியெல்ல, அப்துல் ஹலீம், டி.எம். சுவாமிநாதன் உள்ளடங்கிய குழுவொன்றை நியமித்து, அவர்கள் மூலம் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தருமாறு பிரதமர் ரணில் விக்‌கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளில் பின்னர், அது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (26) திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார்கள்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில், அமைச்சர்களான றிஷாத் பதியுதீன், சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர்  ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சட்ட  மா அதிபர், பொலிஸ் மா அதிபர், கண்டி மாவட்ட அரசாங்க அதிபர், மதிப்பீட்டு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கண்டி மாவட்டத்தில் இனவாத வன்செயல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பிலும் சேதமாக்கப்பட்ட உடைமைகள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் என்பவற்றுக்கான நஷ்டயீடுகளை நியாயமான  முறையில் துரிதமாக  வழங்கவேண்டும் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நியுதவியானது அவர்களது இழப்பீடுகளுக்கு போதுமானதாக இல்லை. பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகள், வாகனங்கள் என்பன சேதமாக்கப்பட்டு எதுவுமற்ற நிலையில் இருக்கின்றவர்களுக்கு அவர்களது தேவையை பூர்த்திசெய்யும் வகையில் முழுமையான நிவாரணம் வழங்கப்படவேண்டும் என பிரதமருக்கு வலியுறுத்தப்பட்டது.

முஸ்லிம் பாராளுமன்‌ற உறுப்பினர்களின் வேண்டுகோளையேற்ற பிரதமர், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக்ஷமன் கிரியெல்ல, அப்துல் ஹலீம், டி.எம். சுவாமிநாதன் ஆகிய நால்வர் உள்ளடங்கிய மதிப்பீட்டு குழுவை நியமித்து, அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த இழப்புகளுக்கான மதிப்பீட்டு அறிக்கையை கையளிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்