பாரதூரமான மோசடிகளையும் அம்பலப்படுத்தவுள்ளோம் - நாமல் குமார

பாரிய மோசடிகள் குறித்து அம்பலப்படுத்தப்படும் என ஊழல் ஒழிப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து நாமல் குமாரவிடம் நேற்றைய தினம் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்த விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் நாமல் குமார கருத்து வெளியிட்டிருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் இடம்பெற்று வரும் பாரியளவிலான காணி அபகரிப்பு உள்ளிட்ட மோசடிகள் பற்றிய விபரங்கள் அம்பலப்படுத்தப்படும். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேலும் சில குரல் பதிவுகளை வழங்கியிருக்கின்றேன். காணி அபகரிப்பு குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது. 

பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இடம்பெற்று வரும் மோசடிகள் தொடர்பிலும் உண்மைகளை அம்பலப்படுத்த திட்டமிட்டுள்ளேன். எல்லா விடயங்கள் பற்றிய தகவல்களையும் ஒரே நேரத்தில் அம்பலப்படுத்துவது சாத்தியமற்றது எனவே ஒவ்வொரு விடயமாக அம்பலப்படுத்த உத்தேசித்துள்ளோம் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...