Headlines
Loading...
”மு.காவின் வீட்டுத்திட்டத்தால் வட்டிக்கு அடிமையாக்கப்படும் மக்கள் ”

”மு.காவின் வீட்டுத்திட்டத்தால் வட்டிக்கு அடிமையாக்கப்படும் மக்கள் ”



எம்.ஏ.எம். முர்ஷித்


"வறிய மக்களின் நலன் கருதி சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக நிந்தவூரில் 115 வீடுகள் கொண்ட வீட்டுத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா என்ற விளம்பரத்தோடு கடந்த சனிக் கிழமை [12] ராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் தலைமையில் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்றது.

உண்மையில் இந்த திட்டம் நிலமிருந்தும் வீடமைக்க வசதியற்ற ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுமேயானால் கட்சி பேதங்களுக்கு அப்பால் சமூக நலன் விரும்பும் எவராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஆனால் இவர்களால் பரப்பப்படும் விளம்பரச் செய்தி ஏழை எளிய மக்களின் தலையைத் தடவி கண்னைப் பிடுங்கும் செய்தி மட்டுமல்லாமல் தெரிந்தும் மார்க விரோத செயலுக்கு இட்டுச்செல்லதாகவுள்ளது.

இது என்ன திட்டம் ?

வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 3.5 சதவீத வட்டியுடன் 8 இலட்சம் ரூபாய் பெருமதியான கடன் அடிப்படையில் ஒரு தொகுதிக்கு 300 வீடுகள் எனும் திட்டமே இதுவாகும்.

குறித்த பயனாளிக்கு சொந்தமான காணி இருக்க வேண்டும். அந்த காணியின் பத்திரத்தினை ஏதேனும் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வைத்து 5 இலட்சம் ரூபாய் 3.5 சதவீதம் வட்டியில் பெறப்படும், குறித்த கட்டுமான இருதிக்கட்டத்தில் மீதி 3இலட்சம் ரூபாய் வீடமைப்பு அதிகார சபையினால் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இப்படியான திட்டம் இதுவரை எவராலும் இலங்கையில் நடைமுறைப் படுத்தவில்லை, இன்னும் சொல்லப்போனால் குறித்த திட்டத்திற்கான அங்கீகாரம் கூட அதிகார சபையினால் வழங்கப்படவில்லை இருப்பினும் அத்திட்டத்திற்கான வரைவுகளை பூர்த்திசெய்து சபைக்கு அல்லது வீடமைப்பு துறை அமைச்சருக்கு வழங்கி ஒப்புதல் எடுக்க அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள். சபை அங்கீகாரம் இல்லாமல் போனாலும் அமைச்சரின் அங்கீகாரம் அல்லது நிதி வழங்களுக்கான ஒப்புதல் வழங்கப்படும் பட்சத்தில் குறித்த திட்டம் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்த முடியும். அப்படியாயினும் ராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் சொல்வது போன்று 115 வீடுகளை கட்ட முடியாது மாறாக 10 முதல் 15 வீடுகளையே கட்ட முடியும். அப்படியும் நடைமுறைப்படுத்தினால் இத்திட்டத்தினை காரணம் காட்டி ஏனைய பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனும் அலுத்தத்திற்கு வீடமைப்பு அமைச்சரும், அதிகார சபையும் அகப்படலாம். அப்படி அகப்படும்போது நிதி மூலம் அல்லது நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளாகும் வேண்டிவரும்.

எப்படியாயினும் வட்டியுடனான கடனடிப்படையிலான திட்டமே இது வாகும் .

வட்டி அற்ற தூய நகரம் நிந்தவூர் ?

நிந்தவூரை பொருத்தமட்டில் இஸ்லாமிய அடிப்படையில் தூய நகரம் எனும் எண்ணக்கருவிரு போதைப்பொருட் பாவனை, விபச்சாரம், வட்டி போன்ற பாவச்செயல்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் சமீப காலமாக பெரிய பள்ளிவாசல், உலமா சபை, தூய நகருக்கான சம்மேளனம், நிந்தவூர் நலன்புரி அமைப்பு உள்ளிட்டவெற்றினால் முன்னெடுக்கப்படுவதை யாவரும் அறிந்ததே.

அதனடிப்படையில் வட்டி நீண்ட கால மற்றும் குறுங்கால கடன் வழங்கும் சங்கங்கள் மற்றும் கம்பனிகளுக்கு எதிரான தடையும் உலமா சபை உள்ளிட்ட அமைப்புக்களால் பிறப்பிக்க பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் ராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் ஊரின் பொதுத் தீர்மானத்திற்கும் இஸ்லாத்திற்கும் விரோதமான வட்டி அடிப்படையிலான வீட்டுத்திட்டத்தினை மக்கள் மத்தியில் திணிக்க முயற்சிப்பதன் நோக்கம் தான் என்னவென்று புரியவில்லை.

வட்டி இல்லாத வீட்டுத்திட்டங்களை வெளிநாட்டு அரசுகளினதும் தனவந்தர்களினதும் பங்களிப்புடன் அமைச்சர் ரிசாட் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா போன்றவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல ஆயிரம் வீடுகளை கட்டி ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளமை யாவரும் அறிந்ததே.

அதுபோன்றே வட்டியற்ற திட்டங்களை கொண்டுவராமல் ஊரினது மார்க்க பொதுத்தீர்மானத்திற்கு எதிராக தனது அரசியல் நோக்கில் ராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் அவர்கள் செயல்படுவது அவர் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.

அது மட்டுமல்லாமல் வீடமைப்பு அதிகார சபையினூடாக ஏதேனும் வீடமைப்பு திட்டத்தினை ஒரு ஊரில் நடைமுறைப்படுத்த வேண்டுமானால் பிரதேச செயலாளர் தலைமையிலான வீடமைப்பு குழு ஒன்று நிறுவப்பட்டு அதனூடாக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட வீடமைப்பு குழுவின் அங்கீகாரத்தோடு குறித்த பயனாளிகளுக்கான வீடுகளை வழங்க அதிகார சபை உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் மாறாக அரசியல் இலாபம் கருதி உண்மையான பயனாளிகளை புறக்கணிக்கனித்து பிரதேச செயலாளரும் அரச அதிகாரிகளும் செயற்பட முடியாது.

அரசியலின் பெயரால் வலிந்து திணிக்கப்படும் பெரும்பாவமான வட்டி, தொடர்பில் உலமா சபை, பள்ளி நிர்வாகம், தூய நகருக்கான சம்மேளனம் மற்றும் நிந்தவூர் நலன்புரி அமைப்பு உள்ளிட்ட தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும்.