முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹஸன் அலி, இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள தவிசாளர் பஷீர் சேகுதாவுத் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், சமூக நலன் விரும்பிகளும் கைகோர்த்து முஸ்லிம் முற்போக்கு முன்னணியுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள்.
முஸ்லிம் சமூகத்தைக் காப்பதற்கு நாம் சக்தி மிக்கவர்களாக எம்மை மா ற்றிக் கொள்வோம் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம்.அஸ்வர் அறைகூவல் விடுத்தார்.
முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமவின் அரசியல் பிரவேசத்தின் 38 ஆவது நிறைவு தொடர்பாக நடைபெற்ற பாராட்டு வைபவம் அகலவத்தையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே ஏ.எச்.எம்.அஸ்வர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர், தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
இன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களே முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாமை குறித்து அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளார்கள்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தீர்த்து வைக்கப்படவில்லை, வடக்கில் முஸ்லிம்கள் மீது துவேசம் காட்டப்படுகிறது என்கிறார். இதையே ரவூப் ஹக்கீமும் கூறுகிறார்.
இன்னுமோர் முஸ்லிம் அரசியல்வாதி கூறுகிறார். முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மதிக்கப்படுவதில்லை. ஜனாதிபதி மாளிகையில் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
ஆனால் இரா.சம்பந்தனுக்கு மாத்திரமே மதிப்பளிக்கப்படுகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு அவர் சென்றால் ஜனாதிபதி எழுந்து நின்று வரவேற்கிறார். இதுதான் இன்றைய முஸ்லிம்களின் அரசியல் நிலைமை.
இந்த நிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். முஸ்லிம்கள் நாமனைவரும் பலமான அரசியல் சக்தியாக உருவாகி மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிக்கவேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி தனது காலத்தில் முஸ்லிம்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டதென்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது என உறுதியளித்துள்ளார்.
கடந்தகால அரசாங்கக் காலத்தினை விட நல்லாட்சியிலே முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. பள்ளிவாசல்களுக்கு சவால்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே முஸ்லிம்களாகிய நாம் முஸ் லிம் முற்போக்கு முன்னணியுடன் கைகோர்க்க வேண்டும் என்றார். (வி-வெள்ளி)
