![]() |
| File Image |
கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் எங்களுடன் இணங்கி வரும் வரைக்கும் வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை. இதுதான் உண்மை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பருத்தித்துறை தொகுதி தமிழரசுக் கட்சிக்கிளைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சமகால அரசியல் குறித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி மேலும் கூறியதாவது;
தமிழரசுக் கட்சி ஒரு சமஷ்டிக் கோரிக்கையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்ட கட்சி. இன்றைக்கு நாங்கள் ஒரு புது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கான ஒரு வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளோம். சமஷ்டி முறையிலான அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு தேவை என்பது கட்சியினுடைய அடிப்படைக் கோட்பாடு. இந்த ஆணையின் பிரகாரம் நாங்கள் இப்போது நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளோடும் சேர்ந்து இப்படியான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் ஆயுதப் போர் நடந்த காலத்திலே சமஷ்டி அரசியலமைப்பு எமக்குத் தட்டில் வைத்துத் தரப்பட்டது. ஆனால், அதனை வேண்டாமென்று உதறிவிட்டு இப்பொழுது ஜனநாயக ரீதியிலேயே பேச்சுவார்த்தை மூலமாக அதைப் பெறுவதற்கு வலியுறுத்துகிறோம். ஒரு முறை யாழ்ப்பாணம் வந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 2005 ஆம் ஆண்டு சமஷ்டி வழங்கத் தயார் எனச் சொல்லியிருந்தார். ஆனால் அதை வேண்டாம் என்று மஹிந்தவுக்கு வாக்களித்தீர்களே என ரணில் வினாயெழுப்பியிருந்தார்.
சமஷ்டிக்கு இரண்டு குணாதிசயங்கள் இருக்க வேண்டும். ஒன்று அதிகாரப்பகிர்வு. சில அதிகாரங்கள் மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகின்ற பொழுது அந்த விடயங்கள் சம்பந்தமாக முழு அதிகாரங்களும் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அதில் மத்திய அரசு தனது ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடாது.
இரண்டாவது, கொடுக்கப்பட்ட அதிகாரத்தை அந்த மாநிலத்தினுடைய அங்கீகாரம் இல்லாமல் திரும்பப் பெற முடியாததாக இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் இருந்தால் அது சமஷ்டி அரசியலமைப்புச் சட்டம். வடக்கு, கிழக்கு இணைப்பு எங்களுடைய அபிலாஷையின் ஓர் அடிப்படை. அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் ஆனால் அது உடனடிச் சாத்தியம் இல்லை
கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் எம்முடன் இணங்கி வரும் வரைக்கும் அது சாத்தியமில்லை. அது தான் உண்மை. இதைச் சொல்லிக் கொண்டு இன்னும் கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம் மக்களை அந்நியப்படுத்துவதற்கான பேச்சுகளைப் பேசிக் கொண்டிருந்தால், யார் வடகிழக்கு இணைப்புக்கு எதிராக செயற்படுகிறார்கள். முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடிப்பதற்கான பேச்சுகளையே தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் வடக்குகிழக்கு இணைப்பு ஏற்படாமல் செய்வதற்காகவே சிலர் செயலாற்றுகிறார்களோ எனத் தோன்றுகிறது.
உண்மையில் நாங்கள் முஸ்லிம் மக்களை திரும்ப அரவணைக்க வேண்டும். அவர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும். இந்த இரண்டு தரப்பினர்களிலும் பிழைகள் இருக்கின்றன. அதனை தீர்க்க வேண்டும். அப்பிழைகளை தீர்ப்பதற்கான பாதையில் நாங்கள் அடியெடுத்து வைத்தால்தான் அது சாத்தியமாகும்.
ஆனால் அதனை நாங்கள் கைவிடப் போவதில்லை. அது முஸ்லிம் மக்களுக்கும் நன்கு தெரியும். முஸ்லிம் தலைமைகளுக்கும் தெரியும். இவ்விடயம் இன்றைக்கு சாத்தியம் இல்லாவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் சாத்தியமாகக் கூடிய பாதையிலேயே நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் எங்களுக்கு 11 உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்கு 7 உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். அப்படியிருக்கத்தக்கதாக நாங்கள் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றோம். அங்கு முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸுக்கே விட்டுக் கொடுத்துள்ளோம்.
அவ்வாறு கொடுத்து இணைந்த ஆட்சியை வெற்றிகரமாக இரண்டு வருடங்கள் நாம் நடத்துவதற்கான காரணம் என்ன? முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் சேர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்பதை இரண்டு மக்களுக்கும் நாங்கள் காண்பிக்க வேண்டும்.
அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்படியான செயல்கள் நடைபெற வேண்டும். ஏனெனில் யுத்த காலத்தில் பல விடயங்கள் நடந்தன. அதனால் மனப்பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
அவை ஆற வேண்டும். ஆறுகின்ற போதுதான் அதற்கான சாத்தியம் வரும். ஆனால் அது சாத்தியப்படுகின்ற வரைக்கும் அரசியலமைப்பு மாற்றத்தை செய்யாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலும் வடக்கு கிழக்கு இணைப்பு இருந்தது. ஆனால் சர்வஜன வாக்கெடுப்பு என்ற நிபந்தனையும் இருந்தது.
ஆகையினால் இந்த விடயங்களை அறிந்து எப்படியாக நாங்கள் நகர வேண்டும் என்பதை தீர்மானித்தல் அவசியம். எல்லாம் கிடைத்தால் தான் ஏற்றுக் கொள்வோம் என்கின்ற நிலை இருந்தால் நாங்கள் தோல்வியுற்ற மக்களாகவே இருப்போம் என்றார்.
நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை. சேனாதிராசா, யாழ். மாவட்டத் தலைவர் பி.கனகசபாபதி ஆகியோரும் உரையாற்றினார்கள். இங்கு சுமார் 50 இளைஞர்கள் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்று கட்சியில் இணைந்து கொண்டனர். (வி-வெ)
