வடகிழக்கு இணைப்பிற்கு ஒருபோதும் தடையாக நாங்கள் இரியோம்; ஹக்கீம்



நாம் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரானவர்களல்ல, இதேவேளை கல்முனை தமிழ்ப்பிரதேச செலயக தரமுயர்த்தலுக்கு எதிரானவர்களும் அல்ல என நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனை தமிழ் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று கல்முனை எஸ்.எல்.ஆர்.விடுதியில் நடைப்பெற்றது.
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கும் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் தடையாக இருப்பதாக அறிகின்றோம்.
இந்த நிலையில் எவ்வாறு தமிழ், முஸ்லிம் ஒற்றுமை பற்றிப்பேசுவது என தமிழ்த்தரப்பினர் கேள்வியெழுப்பியபோதே அவர்கள் மேற்கண்டவாறு பதிலளித்தனர்.

தொடர்ந்தும் பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவிக்கையில்,
எதையும் நாம் மனந்திறந்து பேசவேண்டும். கல்முனையிலுள்ள இரு பிரதேச செயலகங்களையும் ஒன்றாக இணைத்து இரு இனங்களையும் மோதவிட வேண்டுமென்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கல்முனை பிரதேச செயலகத்திற்கு சிங்கள பிரதேச செயலாளரை நியமித்தார்.
அதிஸ்டவசமாக மஹிந்த தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக அது நிறைவேறவில்லை. கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு நாம் எதிர்ப்பல்ல. ஆனால் அந்தப் பிரச்சினை போன்றே அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு பிரச்சினை உள்ளது.

அதாவது தமிழ்மொழி வாரியான கரையோர மாவட்டம் உருவாக்குவது என்பது நீண்டகால கனவாகும். இது தமிழ் பேசுகின்ற இரு சமூகங்களுக்கும் பொதுவானதொரு மாவட்டக் கோரிக்கை. இரு சாராரும் நன்மைபெறலாம்.
எனவே இந்த மொழிவாரியான கரையோர மாவட்டத்திற்கு உடன்பாடு காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தல் என்பது ஒரு பிரச்சினையேயல்ல. அதற்கு நாம் எதிர்ப்புமல்ல. எமது சிவில் சமூகப் பிரச்சினைகளையும் நாம் பார்க்கவேண்டும். இதுதான் யதார்த்தம்
உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எமது மொழிவாரியான கரையோர மாவட்டக் கோரிக்கையை முற்றாக எதிர்க்கின்றார். இந்த நிலையில் எமது சமூகப் பிரச்சினையையும் நாம் இலாவகமாகக் கையாள வேண்டும் தானே.

தேசிய ரீதியில் முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருகின்றன. அது தொடரும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை பிரதிநிதி நிதாஞ்சன் கூறுகையில்,
கல்முனை பழைய பஸ்தரிப்பு நிலையத்தில் தனியார் வங்கிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்திற்கு செல்வதானால் தனியார் பஸ் குறுக்கறுக்கும். மற்றது கல்முனையில் தமிழ் ஆட்டோக்கள் ஓடமுடியாது என்ற வகையில் முன்னாள் மேயர் நிசாம்காரியப்பர் காலை மேசைக்கு மேல் போட்டுக் கொண்டு அலட்சியமாகச் சொன்னார்.

கல்முனை சந்தாங்கேணி மைதானம் ஒருபொது மைதானம் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அதனை ஒரு கழகம் மட்டும் பயன்படுத்தி வருவது யாருக்கும் தெரியாது. கல்முனை மாநகரில் பல்ப் போடவேண்டியது மாநகர சபையின் கடமை என்றார்.
மேலும், உத்தேச கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் கல்முனை வாழ் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்து முஸ்லிம்களை குடியேற்றவிருப்பதாகவும் எதிர்காலத்தில் இப்பிரதேசம் தாழ்ந்து போகும் ஆபத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இதன்போது அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகையில்,

எதனையும் பேசித்தீர்க்க முடியும். உங்கள் மாநகரசபை பிரச்சினைகளை அதற்கான உயரதிகாரம் படைத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆணையாளர் ஊடாகக் கையாள்வார் அது பிரச்சினையல்ல.
சவக்காலைக்கு காவலாளி போடுவது வீதி திருத்துவது வடிகான் அமைப்பது பல்ப் போடுவது இதெல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.
பாரிய அபிவிருத்திப்பணிகள் இருந்தால் என்னிடம் மதிப்பீட்டோடு தாருங்கள் நாமும் உச்சளவு உதவலாம்.
புதிய நகர அபிவிருத்தித் திட்டம் பலாத்காரமாகவோ, ஒருதலைப்பட்சமாகவோ நடைமுறைப்படுத்தப்படமாட்டாது. அதற்கு நான் உத்தரவாதம்.

கல்முனை தமிழ் மக்களின் இனப்பரம்பலைப் பாதிக்காத வகையில் தான் புதிய நகர அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.அதற்கான உபாயங்கள் பின்பற்றப்படும். அச்சப்படத்தேவையில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பில் அமைச்சருடன் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப்சம்சுதீன், சிப்லி மற்றும் வரவழைக்கப்பட்ட கல்முனை மாநகர ஆணையாளர் லியாக்கத்தலி ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
இதேவேளை தமிழ்ப் பிரதிநிதிகள் மாநகரசபை முன்னாள் எதிர்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம், உறுப்பினர் அ.விஜயரெத்தினம் சமூக சேவையாளர் சந்திரசேகரம் ராஜன் தலைமையிலான பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.