பாறுக் ஷிஹான்
அய்யூப் அஸ்மீனைப் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து மீள அழைப்பது தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலையேற்படுத்தும் என நான் கூறவில்லை எனவும் அவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி என்ன ஒப்பந்தம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் செய்துள்ளது என்பது கூட எனக்கு தெரியாது என இலங்கைத்தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னைய நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய இமாம் தெரிவித்துள்ளார்.
சில இணையங்களில் குறித்த மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து மீள அழைப்பதனால் தமிழ் முஸ்லீம் உறவு விரிசல் ஏற்படும் என வெளிவந்த அறிக்கை குறித்து ஊடகவியலாளர் தொலைபேசி ஊடாக வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணசபை ஆளும்தரப்பில் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயற்படுகின்ற அய்யூப் அஸ்மின் அவர்களைப் பதவி விலகவேண்டும் என்று அவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி தெரிவித்திருப்பதாக அறிகின்றேன். இத்தீர்மானம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் தற்போது கதைத்தேன்.அவரும் மாகாண சபை உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ன ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்பது தனக்கு தெரியாது.ஆனால் அக்கட்சி என்ன முடிவு எடுக்கின்றதோ அதற்கு நாங்கள் உடன்படுவோம் என உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி கட்சி அதாவது அய்யூப் அஸ்மீன் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் என்ன ஒப்பந்தம் செய்துள்ளது என்பது முழுமையாக தெரியாது.ஆனால் இரண்டரை வருடம் மாகாண சபை உறுப்பினர் பதவி காலம் நிறைவடைய ஏனைய ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது அவ்வொப்பந்தத்தில் உள்ளதாக நான் அறிந்துள்ளேன். என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
இதுவிடயத்தில் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி என்ன செய்யும் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
