அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்




    மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய இராஜாங்க அமைச்சராக, திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்கிரம,  நேற்று (18)  திங்கட்கிழமை காலை 10 மணிக்கு,  உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை அமைச்சு அலுவலகத்தில் பொறுப்பேற்றார். புதிய இராஜாங்க அமைச்சரை, அமைச்சர் பைஸர் முஸ்தபா வரவேற்று உரை நிகழ்த்தினார்.  

இந்நிகழ்வின்போது, அமைச்சர்களான நிமல் சிறிபால த சில்வா, விஜித் விஜித்தமுனி சொய்ஸா,  அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, மேலதிக செயலாளர் (பரிபாலனம்/நிதி) நயனா நாத்தவிதாரன, மேலதிக செயலாளர் எம்.எம். நயிமுதீன் (திட்டமிடல்/செயற்திட்டம்),  இணைப்புச் செயலாளர் றியாஸ்தீன் சில்மி உட்பட அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

இராஜாங்க  அமைச்சர்  ஸ்ரீயானி விஜேவிக்கிரம இதன்போது,  "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயே,  தான் ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து விலகி,  அரசாங்கத்தில் இணைந்து கொண்டேன்.  எனவே,  அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்  சகல அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும்  தன்னாலான முழு அளவிலான ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும்  வழங்குவேன். அத்தோடு, அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் எப்பொழுதும் பக்கபலமாக இருந்து விசுவாசத்துடன் செயற்படுவேன்" எனக்  குறிப்பிட்டார்.

( ஐ. ஏ. காதிர் கான் )